வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு,

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம்.

இந்நூல் தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளியிடப் பெற்றதாகும். இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதி வரலாற்றுப் பகுதி, 37 தலைப்புகளில் அமைகிறது. நூலாசிரியரின் புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய கட்டுரைகள் உடுக்குறிகள் இட்டுக் காட்டப்பட்டுள்ளன.

சேரன் செங்குட்டுவன் படையெடுப்பால் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கவே களப்பிரர் என்ற இனத்தினர், தமிழகத்தின் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர் (பக். 50). இதுபோன்று வருவன கண்டுபிடிப்புக் கட்டுரைகளில் உள்ளன.

தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட பெருங்கற்கால இடங்கள், 63ன் பட்டியல் பயனுள்ளதாகும். ஊர், மாவட்டம், நடைபெற்ற ஆண்டு, கிடைத்த தொல்பொருட்கள் ஆகிய விபரங்களுடன் அப்பட்டியல் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள, 31 கட்டுரைகளில் இரண்டாம் பகுதியில் நான்கு கட்டுரைகள் தவிர, எஞ்சியவை யாவும் கண்டுபிடிப்புக் கட்டுரைகளாகவே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மொழி எழுத்துக்கள் தோன்றிய ஆண்டுகள்; தமிழிலிருந்து பிராகிருதம் எழுத்துத் தோன்றியது; தமிழிலிருந்தே சமஸ்கிருத எழுத்துக்கள் தோன்றின; தமிழிலிருந்தே ஆங்கில எழுத்துக்கள் தோன்றின; ஸ, ஜ எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்கள் அல்ல; தமிழ் எழுத்துக்களே என்ற கருத்துகளுக்கு ஆதாரங்கள் தரும் கட்டுரைகள் இப்பகுதியில் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான புலவர்கள், 1,512 பேரின் பட்டியல் பாராட்டத்தக்கதாகும். அப்புலவர்களின் ஊர்ப் பெயர்கள் பாடல்கள், நூல்கள் ஆகியனவும் அப்பட்டியலில் உள்ளன. கிரந்த எழுத்துக்களை நீக்கி தேசிய கீதம் வெளியிட வேண்டும் என்று, 27ம் தலைப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்.

உதாரணம்: (கடைசி அடி)
ஜயதே ஜயகே ஜயகே
ஜய ஜய ஜயகே

இரண்டாம் பகுதியின் ஆறாம் தலைப்பு, ‘தமிழ் எண்கள் கண்டுபிடிப்பு’ என்பதாகும். தற்போது, தமிழ் எண்களாகப் புழக்கத்தில் உள்ளவை க(1) உ(2) என வருபவை. அவை கிரந்த எண்கள் என்று எழுதும் ஆசிரியர், ஒ(1) இ(2) மூ(3) ந(4) ஐ(5) அ(6) ஏ(7) எ(8) உ(9) ஒ (10) என்பனவற்றைத் தமிழ் எண்களாகக் கொள்ள வேண்டும் என்கிறார். இவை நடைமுறைச் சாத்தியமா என்ற கருத்து படிக்கும் போது எழும்.

மூன்றாம் பகுதியின், 15 கட்டுரைகளும், முன்னிரு பகுதிகளுக்கு வேறுபட்ட தனித்தனிச் செய்திகள் அடங்கியவை. மொத்தத்தில் தமிழ் புகழேந்தியின் மொழிப்பற்று மற்றும் கல்வெட்டு வரலாற்றுப் புலமை மெச்சத்தக்கதாகும். இவரின் அனைத்து கருத்துக்களும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியனவா எனச் சொல்ல முடியாது.

– ம.வே.பசுபதி.

நன்றி: தினமலர், 19/2/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *