வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள்
வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ.
விரதமும், பூஜையும் இந்து மதத்தின் இரு கண்கள். மனிதன் முழுமையாக வாழ்வதற்கும், உயிர்கள் ஆனந்தமாக வாழ்வதற்கும் விரதங்கள் இன்றியமையாதவை.
ஜம்புலன்களை அடக்கி இறைவனிடம் சரணாகதி நிலையை அடைய விரதங்கள் உதவுகின்றன. இந்த நூலில் துன்பங்கள் நீங்க, செல்வம் பெருக, திருமணத் தடை நீங்க, தம்பதியர் ஒற்றுமை ஓங்க, குழந்தை வரம் கிடைக்க, கல்வி சிறக்க, தொழில் தடைகள் நீங்க, பகை விலக, நவக்கிரக தோஷம் நீங்க, தீர்க்க சுமங்கலி வரம் அருள, எதிரிகளை வெல்ல, நீடித்த ஆயுள் பெற, ஐஸ்வர்யம் பெருக, முக்தி பேறு கிடைக்க என்னென்ன விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த நூலில் செந்தூர் திருமாலன் விரிவாக எழுதியுள்ளார்.
இந்த நூலில் சங்கடஹர சதுர்த்தி முதல் பங்குனி உத்திரம் வரை 25 விரதங்களும், அது தொடர்பான வண்ணப்படங்களும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு விரதமும் உருவான கதை, விரத முறைகள், விரதத்தால் கிடைக்கும் பயன்கள், விரதத்துக்குரிய காயத்ரி மந்திரம் என பயனுள்ள பல தகவல்களை புராண நூல்கள் அடிப்படையிலும், ஆராய்ச்சி கண்ணோட்டத்துடனும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
எந்தெந்த பிரச்னைக்கு எந்த தெய்வத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும்? விரதம் இருக்க வேண்டுமா? அந்த விரதத்jதை எப்படி இருப்பது? எந்தக் கோவிலுக்குப் போனால் விசேஷம் போன்ற விவரங்களும் கூறப்பட்டுள்ளன. மேலும் ஆனந்தம் தரும் அனுமன் வரிபாடு தொடங்கி பகை, பிணி போக்கு கருட பஞ்சமி வரையிலான 16 வகை பூஜை முறைகளையும் இந்த நூலில் கூறியுள்ளார்.
“விரதங்கள் பற்றிய பல உண்மைகளையும், புராண சாஸ்திர விளக்கங்களையும், விரதத்தின் முறைகளையும், விரதத்தின் பலன்களையும் பற்றி முழுமையான தகவல்களுடன் தொகுத்து ஒரு ‘விரத அகராதி’ போல் வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இந்நூல் ஆன்மிக உலகிற்கு கிடைத்த ஞானப் பொக்கிஷம் ஆகும். இதில் இடம் பெற்ற வண்ணப்படங்கள் வழிபாட்டுக்குரியவை” என்று வேலூர் ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மா அணிந்துரையில் அளித்துள்ள பாராட்டுரை. இந்த நூலுக்கு மேலும் பொலிவைச் சேர்க்கிறது.
நன்றி: தினத்தந்தி, 17/8/2016.