யாப்பு விளக்கம்
யாப்பு விளக்கம் (தமிழ்ச் செய்யுள் இலக்கணம்), ப.எழில்வாணன், தமிழ்வாணன் பதிப்பகம், பக்.572, விலை ரூ.650.
தமிழில் உள்ள யாப்பிலக்கணங்கள்தாம் தொன்மையும் முதன்மையும் கொண்டவையாகத் திகழ்கின்றன. தொல்காப்பியத்திற்குப் பிறகு புலவர்கள் பலர் யாப்பிலக்கணம் செய்துள்ளனர் என்றாலும், தொல்காப்பியத்திற்குப் பிறகு கிடைத்த இரு யாப்பிலக்கண நூல்கள், அமிர்தசாகரர் என்பவரால் எழுதப்பட்ட யாப்பருங்கலமும், யாப்பருங்கலக்காரிகையும்தான். இந்நூல்களுக்குப் பிறகு சுமார் முப்பது யாப்பிலக்கண நூல்கள் வந்ததாகத் தெரிய வருகிறது.
இந்நூல் இயற்றமிழ்ப் பாக்கள், இசைத்தமிழ்ப் பாக்கள், பொது, சித்திரப் பாக்கள் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டு உறுப்பியல், பாவினங்கள், புதுப் பாவியல், இசைப்பாவியல், சித்திரப்பாவியல், ஒழிபியல், நுட்பவியல் ஆகியவற்றை விளக்கமாகச் சொல்கிறது. எழுத்து, அசை, சீர், தொடை முதலிய செய்யுள் உறுப்பியல்களையும்; வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா முதலிய பாவியல்களையும், அப்பாவினங்களின் இனமாகிய (பாவினவியல்) வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம், ஆசிரிய விருத்தம், கலித்தாழிசை, வஞ்சித் தாழிசை, வஞ்சி விருத்தம் முதலியவற்றையும் விரித்துரைக்கிறது.
கும்மி, சிந்து, பண்ணத்தி, சந்தப்பா, வண்ணப்பா ஆகியவை பற்றி இசைப் பாவியல் எடுத்துரைக்கிறது. புதுப்பாவியலின் இலக்கணங்களாக குழந்தைப் பா, துளிப்பா, திரைப்பா ஆகியவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இலக்கண நூற்பா, உரை, சான்றுப் பாடல் என்ற வடிவில் படைக்கப்பட்டுள்ள இந்நூல், தமிழுக்கு வளம் சேர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம்.
நன்றி: தினமணி 15/11/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818