இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர்
இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் (வாழ்வும் படைப்பும்), சேவியர், தோழமை வெளியீடு, பக். 184, விலை 150ரூ.
பாலசந்தரைப் பல பரிமாணங்களில் அறிமுகப்படுத்தும் அற்புதமான புத்தகம். ஒரு பிலிம் மேக்கர் நாட்டுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும், கெட்டதை செய்துவிடக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக கே.பி.யே சொல்லி இருக்கிறார். பெண்களை மையப்படுத்திப் பல கதைகளைச் சொன்னவர். நடிகர்கள் கொடி கட்டி பறந்த காலத்திலேயே அவர் படத்தில் நட்சத்திரங்கள் இருந்தது இல்லை. அவர் தன், எழுத்தையே நம்பினார். அவர் இயக்கிய, ஏக் துஜே கேலியே இந்திப் படத்தின் வசூல் 10 கோடி ரூபாய். 1981ம் ஆண்டு அது மாபெரும் சாதனை வசூல். மரோ சரித்ரா ஆந்திராவில் 450 நாட்கள் தொடர்ந்து ஓடியது. பெங்களூரில், 300 நாட்கள், சபையர் திரையரங்கில், 596 நாட்கள். ஆனால் இயக்குனர் சிகரம், திரைக்கதை இயக்கத்தை பொறுத்தவரை, நான் ஒரு மாணவன் என, அடக்கத்துடன் சொல்லிக் கொண்டார். இதுபோன்ற பாலசந்தர் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. -எஸ். குரு. நன்றி: தினமலர், 2/6/2015.
—-
எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி, விஸ்வம், விஜயா பதிப்பகம், பக். 320, விலை 100ரூ.
சுதந்திர இந்தியாவின் முதல் கால் நூற்றாண்டு காலத் தென்னிந்திய சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மூன்று. அவை ஜெமினி, ஏ.வி.எம்., மற்றும் வாஹினி. வாஹினி ஸ்டூடியோ நிறுவனரான பி. நாகிரெட்டியை, முதலாளி என்றுதான் அழைப்பார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு நாகிரெட்டியை அவர் மதித்தார். வாஹினி ஸ்டூடியோ துவங்கிய காலகட்டம் முதல் அது தயாரித்து அளித்த திரைப்படங்கள், உருவாக்கிய கலைஞர்கள் மற்றும் சென்னையில் ஒரு அடையாளமாக மாறிய வரலாறு ஆகியவற்றை விரிவாக பதிவு செய்துள்ளது இந்த நூல். நாகிரெட்டி தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த, எங்க வீட்டுப் பிள்ளை படத்தை தியேட்டரில் பார்க்க இருவரும் சென்றபோது, கூட்டத்தில் சிக்கிக் கொண்டு நாகிரெட்டியை அலேக்காக தூக்கி வந்து காரில் ஏற்றிய எம்.ஜி.ஆரின் செயலைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர் என்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 2/6/2015.