உலகத் தமிழ்க் கவிதைகள்

உலகத் தமிழ்க் கவிதைகள், தொகுப்பு செல்வா கனகநாயகம், விகடன் பிரசுரம், சென்னை, விலை 250ரூ.

உலகத்தின் பரப்பையும் எல்லையையும் மற்ற மனிதர்களின் வாசனையையும் சிந்தனையையும் உணர்ந்து உள்வாங்குவதற்கு முன்பே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவன் தமிழன். அண்டிப் பிழைப்பது மட்டுமே புலவர்களின் இலக்கணமாக இருந்த காலத்தில் நீயோ மன்னன்? என்று கேள்வி கேட்கும் துணிச்சல் தமிழ்க் கவிதைக்கு இருந்தது. கலை கலைக்காகவே அழகியல் இல்லா இலக்கியம் அர்த்தமற்றது. கோஷம் போடுவதற்கும் கவிதைக்கும் வித்தியாசம் உண்டு மகனே என்றெல்லாம் விமர்சனப் புலிகள் தங்கள் அரசியல் அடிமனத்தை மறைத்து இலக்கணங்கள் வகுத்தாலும் தமிழ்க் கவிதை, தமிழின் கவிதையாக மக்களின் கவிதையாக எப்போதும் இருந்தது. அப்படிப்பட்ட கவிதைகளே உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அப்படி உலகளாவிய அளவில் உணரப்பட்ட சமகாலத் தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கனடாவைச் சேர்ந்த தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பில் வெளியிட்டார் செல்வா கனகநாயகம். டொரன்டோ பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை பேராசிரியரான இவர், 78 தமிழ்க் விஞர்களின் படைப்புகளைத் தொகுத்துத்தர, அதை ஆங்கிலத்தில் ம.லெ.தங்கப்பா, அனுஷ்யா ராமஸ்வாமி, மைதிலி தயாநிதி ஆகிய மூவரும் அருமையான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். ஒரு பக்கம் தமிழ்க் கவிதையும் அதற்கு எதிர்ப் பக்கம் ஆங்கில மொழிபெயர்ப்புமாக இரு மொழி நூலாக இது வெளிவந்துள்ளது. தமிழன் வாணிபம் செய்யப்போனதால் ஆதியில் தமிழ் பரவியது. இடைக்காலத்தில் இலக்கியச் செழுமை பரவியதால் தமிழ் உணரப்பட்டது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக அகதியாய் தமிழன் பரவியதால் தமிழும் உலகளாவிய மொழி ஆனது. ஒருவன் கொல்லப்படும்போது பெரிதாக என்ன நடக்கப் போகிறன்றது இன்னுமொருவன் கொல்லப்படுவான் என்பதைத் தவிர என்ற அலறியின் குரல் தமிழ் குரல் மட்டுமல்ல. ஒடுக்கப்பட்டோர் உலகக் குரல். இரும்பு வணிகர் உலவும் காட்டில் பூத்திருக்கிறது கார்த்திகைப் பூ என்ற நிலாந்தனின் வரிகள் ஈழத்துக்கு மட்டுமா தமிழகத்துக்குப் பொருந்தாதா? ஈழம், தமிழகம், சிங்கப்பூர், மலேசியா மற்றும் புலம் பெயர் நாடுகளைச் சேர்ந்த தமிழ்க் கவிகளின் கதைகளில் சங்கமமாக இருக்கிறது இந்தப் புத்தகம். தமிழை உலகுக்கும் தமிழின் கவித்துவத்தைத் தமிழகத்துக்கும் காட்டும் புத்தகம் இது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 12/11/2014.

Leave a Reply

Your email address will not be published.