கறை படிந்த கரங்களா?, (லார்டு ராபர்ட் கிளைவ்) ஆசிரியர் – சக்தி. கிருஷ்ணமூர்த்தி, பி,எஸ்.பவுண்டேஷன், பக்கங்கள் 78, விலை 45 ரூ.
இந்நூல் ராபர்ட் கிளைவ் பற்றிய வரலாற்று நாடகம். கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வருவதற்கும், ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் காலூன்றவும் காரணமாகத் திகழ்ந்தவர் கிளைவ். வங்காள கவர்னராக இருந்தபோது, அங்கு நடைபெற்ற கொலைகள், கொள்ளைகள், நிர்வாகச் சீர்கேடுகளுக்குக் காரணம் கிளைவ். இந்திய மன்னர்களிடம் லஞ்சம் பெற்று, தன்பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் லட்சக்கணக்கான இங்கிலாந்து கரன்சியான பவுண்டுகளை சேமித்தான். தன் உறவினர்களுக்குப் பதவிகளும், பட்டங்களும் அளித்தான். பலருடைய இறப்புக்குக் காரணமாய் இருந்தான். சிராஜ் உத்தவுலாவைப் பதவியிலிருந்து இறக்கி, அவ்விடத்தில் மீர்ஜாபர் என்பவனை அமரச் செய்ய, பல லட்சம் பொற்காசுகளைப் பெற்றான். கல்கத்தாவைச் சுற்றிலும், 882சதுர மைல் பரப்பளவைத் தன்னுடையதாக்கி, அதற்குத் தன்னை ஜமின்தாரராக்கிக் கொண்டான். பழிபாவங்களுக்கு அஞ்சாத கொலைகாரன் கிளைவ். லண்டனுக்குத் திருப்பி அழைக்கப்பட்டான். அவன் செய்த குற்றங்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. தண்டனை கிடைக்குமென்று எதிர்பார்த்தான். ஆங்கிலயப் பேரரசை நிலை நாட்டவே, தான் தவறுகள் செய்ததாக வாக்குமூலம் அளித்தான். அவன் வீரத்தைப் பாராட்டிய விசாரணைக் கமிஷன், கிளைவ் குற்றவாளி இல்லை என, முடிவு செய்தது. கிளைவ் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் அவன் மனமே அவனை உறுத்தியது. பழங்களை அரியும் கத்தியால் குத்திக்கொண்டு, தன்னை மாய்த்துக்கொண்டான். கறை படிந்த கரங்களைத் தூயதாக்கிக் கொண்டதாக நாடகம் முடிகிறது. முடிவு துன்பியல் நாடகமாக்கியது. வரலாற்றுச் செய்திகளைக் காட்சிகளாக்கிய நாடக நூல். – பேரா. ம. நா. சந்தான கிருஷ்ணன். நன்றி: தினமலர், 2-9-2012