1945ல் இப்படியெல்லாம் இருந்தது…

நினைவு அலைகள், டாக்டர் தி.சே.சவு. ராஜன், சந்தியா பதிப்பகம், பக்கங்கள் 352,விலை 225 ரூ.

இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மிகவும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர், இந்நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சவு.ராஜன். 1947ல் வெளிவந்த பதிப்பிற்குப்பின், தற்போதுதான் இந்நூல் வெளிவந்துள்ளது. ராஜனின் சுயசரிதையாக இந்நூல் இருப்பினும், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பலரின் நிகழ்வுகளும் உள்ளன. அக்கால சிறைக் கொடுமை குறித்தும், தேர்தல் குறித்தும், ஹரிஜன சேவை குறித்தும், அவர் எழுதியுள்ள நிகழ்வுகள், படிக்கப்படிக்க, ஒரு நாவலைப் படிக்கும் விறுவிறுப்புடன் உள்ளன. நூலிற்கு, கல்கி எழுதியுள்ள முன்னுரை மிக அருமை. கற்பனையோ, தவறான தகவல்களோ இல்லாத அருமையான நூல். – டாக்டர். கலியன் சம்பத்து
ஒரு விரலில் உலகை ஜெயித்தவர், நூலாசிரியர் மாலினி சிப், தமிழில் ஐஸ்வர்யன், விகடன் பிரசுரம், பக்கங்கள் 248, விலை 100 ரூ. ‘செரிப்ரல் பால்ஸி’ குறைபாட்டுடன் பிறந்த பெண் குழந்தையின் சுயசரிதை. ஆங்கிலத்தில் அவரே எழுதியதை, தமிழில் ஐஸ்வர்யன் மொழி மாற்றம் செய்திருக்கிறார். பல சவால்களை சந்திக்கும் அந்தக் குழந்தையின் செல்வச் செழிப்பு மிக்க பெற்றோரின் வாழ்க்கை பற்றிய நிகழ்வுகளைப் படிக்கும்போது, சில அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், கொஞ்சமாய் அவர்களின் சுயநலம், சுகம் ஆகிய தகவல்கள், நம் நெஞ்சங்களை லோசாய் நெருடுகின்றன. பிரபல பத்திரிகையாளர் அருண்ஷோரியின் நெருங்கிய உறவினராக மாலினி சிப் இருப்பதால், நூலை மிகச் சிறப்பாக எழுத முடிந்தது போலும். மொழிமாற்றம் செய்துள்ள ஐஸ்வர்யனின் மொழி நடை பிரமாதமாக இருக்கிறது. -ஜனகன்.
சோனியா காந்தி (ஒரு வாழ்க்கை வரலாறு), எ. பொன்னுசாமி, பூம்புகார் பதிப்பகம், பக்கங்கள் 296, விலை 185 ரூ. இந்த வாழ்க்கை வரலாற்று நூல், இத்தாலிய நகரமான, ஆர்மாசானோவில் இருந்து, மிக்க பாதுகாப்பான அதிகாரம் மிக்க 10, ஜன்பத் இந்திய இல்லத்திற்கு சோனியா மேற்கொண்ட அரசியல் நெடும்பயணத்தை அழகுற வருணனை செய்கிறது. சோனியா தமக்கு, இந்திராவே உதாரணத் தலைவராகக் கருதினார். ஆனாலும், 1998ல் தயக்கத்துடன் அரசியலை ஏற்றபின், தனது மாமியார் போக்கினைக் கடைபிடிக்காது தனக்கெனத் தனி அணுகுமுறையை அமைத்துக் கொண்டு, அதில் வெற்றிக் கண்டார். கடந்து 2004, 2009 ஆகிய தேர்தலில், ஐக்கிய முன்னேற்ற கூட்டணிவென்றாலும், பிரதமர் பதவியைத் தியாகம் செய்ததால், உலகோர் மதிப்பில் உயர்த்தப்பட்டார். பின், 1977ல் அதிகாரம் இன்றி இருந்த நிலையில், ராஜிவும், சஞ்சயும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டனர். அம்மாவின் தோல்விக்கு சஞ்சய்தான் காரணம் என்று ராஜிவ் வெறுத்தார் (பக்கம் 41), மேனகாவை விட, சோனியா மீது இந்திரா தனி அன்பு செலுத்தினார். சஞ்சய் மரணத்திற்குப் பின், மேனகா அரசியலுக்கு வருவதை சோனியா தடுத்துவிட்டார் (பக்கம் 53), ஆறே மாதத்தில் இந்தியைக் கற்றது, மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியது, ‘2ஜி’ அலைக்கற்றை ஊழல் போபர்ஸ் ஊழல்களை எதிர்கொண்டது போன்ற பல அதிரடி அரசியல் நிகழ்வுகளைத் தந்த சோனியாவின் வாழ்க்கை வரலாற்றை படிப்பவருக்கு சோர்வே வராது. – முனைவர் மா.கி.ரமணன். சுற்றுச் சூழல் மாசு- விளைவுகளும் விழிப்புணர்வும், வேணுசீனிவாசன், விஜயா பதிப்பகம், பக்கங்கள் 184, விலை 100 ரூ. நம் நாட்டின் பல பாகங்களிலும், 74 தேசியப் பூங்காக்கள், 414 சரணாலயங்கள் அமைக்கப்பட்டு, விலங்குகளை அழிவிலிருந்து காப்பாற்றி வருகிறோம். இருப்பினும் 70 பாலூட்டிகள், 22 ஊர்வன இனங்கள், 41 பறவை இனங்கள், அழிந்துவிடும் நிலையில் அபாய கட்டத்தில் இருக்கின்றனவாம். இந்நூல் சுற்றுச்சூழலினால் ஏற்படும் விளைவுகளைக் கூறுகிறது. அத்தோடு அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளையும் விவரிக்கிறது. நாம் வாழும், இந்த பூமியை சூழல் மாசு தாக்காமல் காப்பாற்றும் பொறுப்பு, நம் எல்லாருக்கும் இருக்கிறது. எல்லாரும், அவசியம் படிக்க வேண்டிய நூல் – சிவா
கரிசக்காட்டு கருவாச்சிகள், பனிமுகில் கா. கதிர்வேல், தனல் பதிப்பகம், பக்கங்கள் 152, விலை 80 ரூ. தான் அனுபவப்பட்ட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் வாழ்வியல் சூழலை, தன் சிறுகதைகளின் மூலமாக, பனிமுகில் கா. கதிர்வேல், கரிசக்காட்டு கருவாச்சிகள் எனும் தொகுப்பின் மூலமாக, நமக்குள்ளே மையம் கொண்டு நிலை பெறச் செய்திருக்கிறார். சிறுகதைகள் ஒவ்வொன்றுக்கும், கதையின் நாயகிகளின் பெயர்களையே தலைப்பாக வைத்திருப்பது தொகுப்பிற்கு தனி சிறப்பாக அமைந்திருக்கிறது. கிராமத்து தேவதைகளைப் போன்ற இந்த கருவாச்சிகளின் தரிசனம், தனி அழகுடனே இருக்கிறது. – ஸ்ரீநிவாஸ் பிரபு.
நண்பனின் தந்தை, அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், பக்கக்ள் 142, விலை 100 ரூ. அசோகமித்திரன், பத்துமாத இடைவெளியில் எழுதியுள்ள ஐந்து படைப்புகள் உள்ளன. இரண்டு குறுநாவல், மூன்று சிறுகதைகள், இலக்கியத் தரமானவை. – ஜனகன்
ஒயிலாட்டம் சமூகப் பண்பாட்டு ஆய்வு, ஆ. அழகுசெல்வம், பானை பப்ளிகேஷன்ஸ், பக்கங்கள் 97, விலை 50 ரூ. முத்தமிழில் மூன்றாவது கூத்து. தமிழர் தோன்றிய காலம் முதலாக, இசையும், நடனமும் கூடவே தோன்றி வளர்ந்துள்ளது. பொருநர், பாணர், கூத்தர், வயிரியர், விறலியர், ஆடுகள மகளிர் சங்க இலக்கிய கூத்திசை மரபினர். சிலப்பதிகார அரங்கேற்றுக்காதை, வேட்டுவ வரி, துணங்கைக் கூத்து, ஆய்ச்சியர் குரவை ஆகியன தமிழனின் நடனக்கலைக்கு ஆதாரங்கள். தனி நடனம், குழுநடனம் எனும் இரண்டில், ஒயிலாட்டம் குழு நடனத்திற்கு அழகு சேர்க்கிறது. நாட்டார் நிகழ்த்தும் கலைகளில், கழியலாட்டம், கோலாட்டம், கும்மி, தேவராட்டம் ஆகியவற்றுக்கும் ஒயிலாட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் சிறப்பாக விளக்குகிறார். கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திர கீர்த்தினையை, ஒயிலாட்டத்தில் ஆடுவது பற்றி சந்தக் குறிப்புகளுடன் விளக்கியுள்ளார். ‘மாதா பிதாவை மனதில் எண்ணி, நீங்கள் மகிழ்ச்சியுடனே வணங்குங்களே’ என்று வாவியல் பண்புகளைப் பாடி, ஒயிலாட்டம் கூட்டமாய் ஆடுவதை கண்டால் உள்ளம் மகிழ்கிறது.
மூவர் தேவராச் சொல்லகராதி தொகுதி 2, டாக்டர் புலவர் மணியன், ராமானந்த அடிகள் அறக்கட்டளை வெளியீடு, கோவை, பக்கங்கள் 805, விலை 1200 ரூ. (இரண்டு தொகுதிக்கும்) மூவர் தேவாரம் – பக்தியை வளர்த்ததுடன், தமிழ் மொழியையும் வளர்த்துள்ளது எனலாம். திருநாவுக்கரசர், திருஞஞானசம்பந்தர், சுந்தரர் – மூவரும் பாடிய தேவாரம் பாடல்களில் பலசொற்கள், அக்காலத்தின் வழக்குச் சொற்கள். அவற்றின் பொருளை இன்றி அறியும் வகையில், இந்நூல் வெளிவந்துள்ளது. தமிழன்பர்களுக்கு இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நூலின் புரவலர், அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கத்திற்கு, தமிழ் கூறுநல்லுலகம் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது எனலாம். பாதுகாக்கப்படவேண்டிய நல்ல நூல். – டாக்டர் கலியன் சம்பத்து 1945ல் இப்படியெல்லாம் இருந்தது…, அசோகமித்திரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், பக்கங்கள் 136, விலை 90ரூ. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் அசோகமித்திரன், கடந்த ஐந்தாண்டுகளில் எழுதிய 21 கதைகள் கொண்ட தொகுப்பு இது. அசோகமித்திரன் கதைகளுக்குத் தேர்வு செய்யும் கருவும், களமும், மொழி நடையும், உத்தியும் வித்தியாசமானவை. கதைகயை நீரோட்டம் போல மிக லாவகமாக எழுதிச் செல்லும் திறமையான எழுத்தாளர். இலக்கிய உலகில் பல குழுக்கள் உள்ளன என்பது உண்மை. ஆனால், எல்லா குழுவினரும் மதித்துப் போற்றும் ஒரே எழுத்தாளர், அசோகமித்திரன். மிகச்சிறியதும், ஓரளவு பெரியதுமான இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள், வாசகர்களால் நிச்சயம் வரவேற்கப்படும் என்று கூறலாம். – ஜனகன் நன்றி: தினமலர், 2-9-2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *