கலாமின் எனது பயணம்

ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் எனது பயணம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், புதுதில்லி 110002, விலை 150ரூ.

கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல் பக்ஷி லஷ்மண சாஸ்திரிகளும், போதல் பாதிரியாரும், ஜைனுலாப்தீனும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் சந்தித்து ஊர் நலனைப் பற்றிய சிந்தனைகளில் ஈடுபட்டிருந்த ஆரோக்கியமான காலங்களில் இந்தத் தேசத்தை ஆண்டு அடிமைப்படுத்தியிருந்தவர்கள் வெள்ளையர்கள்தான். ஆனால் சுதந்திர பாரதம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய இன்றைய காலகட்டத்தில் அத்தகைய இணக்கமான சூழல் வெகு அரிதாகிவிட்ட அவலத்துக்குக் காரணம் சுயநல அரசியல்தான் என்பதைப் புரிந்து கொள்ளச் சிறிதளவேனும் இந்த நூல் உதவக்கூடும். எனது பயணம் என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்த நூலில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கூறுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு இராமேசுவரத்தில் வாழ்ந்த எனது முப்பாட்டன், இமாம்கள், அர்ச்சகர்கள் போன்றவர்களின் கதைகளை இனிவரும் சந்ததியினர் நினைவில் வைத்துக் கொண்டால் மதச்சார்பற்ற ஒரு ஜனநாயக நாடாக நாம் என்றென்றும் தொடர்ந்து தழைத்துக்கொண்டிருப்போம். 102 வயது வாழ்ந்த தம்முடைய தந்தையாரோடு எண்பதாண்டுகள் இணைபிரியாமல் வாழும் பேறு பெற்றிருந்த ஒரு தாயின் அன்பில் திளைத்திருந்தவர் அப்துல் கலாம். திருமணமான சகோதரி ஜொஹரா தன்னிடமிருந்த நகைகளையெல்லாம் சிறிதும் தயங்காமல் அடமானம் வைத்துப் பணம் வாங்கித் தம்முடைய உயர் கல்விக்காக உதவியதையும் நன்றியோடு நினைவுகூர்கிறார். இந்திய விண்வெளித்துறை அறிவியலின் முன்னோடிகளுள் ஒருவரான டாக்டர் விக்ரம் சாராபாயோடு தமக்கு ஏற்பட்ட நல்லுறவைப் பற்றிச் சொல்வதோடு அவருடைய அகால மரணத்தைப் பற்றிய நினைவுகளையும் இந்த நூலில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார். எனக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென்று காலமாவது என் வாழ்வில் ஒரு பாணியாக இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று எழுதுகிறோர். அதிகம் படித்திராத தம்முடைய தந்தையின் நினைவுகளைப் பல இடங்களில் உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் அப்துல் கலாம். நீ வளரவேண்டும் என்றால் இச்சிறு நகரத்தைவிட்டுப் போகவேண்டும் என்பது எனக்குத் தெரியும். கடற்பறவையானது தனக்கென்று எந்தவொரு கூடும் இல்லாமல் தன்னந்தனியாகச் சூரியனின் குறுக்கே பறந்து செல்வதில்லையா? உனது சொந்த ஊர் குறித்த ஏக்கத்தை விட்டொழித்து விட்டு உனது மாபெரும் கனவுகள் உனக்காகக் காத்திருக்கிற இடத்துக்கு நீ சென்றாக வேண்டும் என்று சொல்லி ஆசீர்வதித்த தந்தையின் சொற்கள் ஓர் அழகான கவிதை மாதிரி த்வனிக்கிறது. ஆங்கிலத்திலிருந்து அழகாகத் தமிழாக்கம் செய்துள்ள நாகலட்சுமி சண்முகத்தையும் மனம் திறந்து பாராட்டவேண்டும். -சுப்ர. பாலன். நன்றி: கல்கி 3/7/2014.

Leave a Reply

Your email address will not be published.