கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை
கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை, ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ.
உருளும் காலம் உறையும் அற்புதங்களைச் செய்பவை புத்தகங்கள். சித்திரங்கள் படிக்கிற அனுபவத்தை இன்றைய குழந்தைகள் இழந்து வருவது தலைமுறை துயரம்.
ஏராளமான சேனல்களும், கணினிகளும் திரிக்கும் ஒளிக்கயிறுகளால் தாவிக் குதிக்கும் குழந்தைகள் சீக்கிரமே தங்களுக்கான தேவ உலகத்தை இழந்துவிடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் புழுதி வாசத்தையும், புத்தக வாசத்தையும் அறிமுகப்படுத்துவது நமது முதல் கடமை. சிறியோர் முதல் பெரியோர் வரை பார்க்க, படிக்கத் தக்கதாக கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ சித்திரக்கதை வெளிவந்திருக்கிறது.
சித்திரக்காரர் ப. தங்கத்தின் பணி அளப்பரியது. கல்கியின் கதைக்களனை சித்திரத்திற்குள் கொண்டு வந்து சேர்ப்பது சுலப காரியமில்லை. பெரியவர் தங்கம் செய்திருப்பது வாழ்நாள் சிறப்பு. வரலாற்றின் தீப்பந்தங்களை தன் மெருகூட்டும் சித்திரங்களின் வழியாக ஏந்திச் செல்கிறார். ஓய்வெடுக்கும் தருணத்தில் தங்கம் செய்திருப்பதை தமிழ் உலகம் வணங்க வேண்டியது அவசியம்.
கண்கள் இடுங்கி படிக்க வேண்டிய பொன்னியின் செல்வனை சரேலென அழகு சித்திரக்கோடுகளில் அனாயாசமாக செய்து முடிக்கிறார். தங்கம் அவர்களின் படைப்புக்கு மரியாதை செய்ய வேண்டிய கடமை தமிழ்ச் சமூகத்துக்கு இருக்கிறது. தவிர்க்க முடியாத புத்தகம்.
நன்றி: குங்குமம், 5/5/2017.