கானகம்

கானகம், லட்சுமி சரவணக்குமார், சென்னை மலைச்சொல் பதிப்பகம்.

வெற்றிக்காக போராடும் இரக்கமற்ற மிருகங்கள் இளம் எழுத்தளர் லட்சுமி சரவணக்குமார் எழுதிய, கானகம் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். சென்னை மலைச்சொல் பதிப்பகத்தார் வெளியிட்டு உள்ளனர். முழுக்க காடு மற்றும் வேட்டையைப் பற்றி வெளிவந்த நாவல் இது. வேட்டையாடுதல் தொடர்பான நூல்கள், தமிழில் மிகக் குறைவு. 1950களில் ஜிம் கார்பெட் எழுதிய வேட்டை தொடர்பான நூல்கள்தான் இங்கு பிரபலமாக இருந்தன. இந்நிலையில் கானகம் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. வேட்டைக்காரனின் மனநிலை, வேட்டையாடும் முறை ஆகியவற்றோடு, அன்றாடம் மனித வாழ்க்கையில் நடக்கும் வேட்டையை ஒப்பிட்டு கதை செல்கிறது. கதையின் நாயகன் தங்கப்பன், புலி ஒன்றை வேட்டையாடுவதிலிருந்து நாவல் துவங்குகிறது. மூன்று குட்டிகளை ஈன்ற, புலி தண்ணீர் குடிக்க வரும்போது, அதை ஈர்க்க ஆட்டை மரத்தில் கட்டி வைத்து, அதை நோக்கி புலி வரும்போது, சுட்டிக் கொல்கிறான். கேரம் விளையாட்டில், ஒரு காயை பாக்கெட் செய்யும்போது ஏற்படும் திரில் போல மிருக வேட்டையை ஒப்பிடுகின்றனர். இப்படியாகச் செல்லும் கதையின் கடைசி கட்டத்தில், தங்கப்பன் எந்த புலியைச் சுட்டுக் கொன்றானோ, அந்தப் புலியின் குட்டியால் கொல்லப்படுவதோடு கதை முடிகிறது. தங்கப்பனை பழிவாங்க, இந்த சம்பவம் நடக்கவில்லை. வேட்டையின்போது இயல்பாக நடக்கும் சம்பவமாகவே, தங்கப்பன் கொல்லப்படுகிறான். காட்டில் வாழும் எந்த மிருகமும் இயல்பாக சாவதில்லை. அது பழம் இழக்கும்போது, மற்றொரு மிருகத்தால் கொல்லப்படுகிறது. குறிப்பாக புலி வயதாகும்போது மற்றொரு புலியால்தான் கொல்லப்படுகிறது. அதுபோலவே, வேட்டையாடுதலையே வாழ்க்கையாகக் கொண்ட தங்கப்பனிடம், மென்மையான உணர்வு, இரக்கம் போன்றவை வற்றிப்போய், காட்டில் வாழும் மனித மிருகமாக மாறுகிறான். வேட்டையாடுதலை இரக்கமற்ற சொலை என்பதை மறந்து, அதை ஒரு தீரச் செயலாக பார்க்கின்றனர். இங்கு கருணைக்கு இடமில்லை. இயல்பான வாழ்க்கையிலும், தேவைகளுக்காக போராடத் துவங்கும் மனிதன், தன் தேவைகளை பூர்த்தி செய்து கெள்வதற்கு எதையும் செய்கிறான். அதைத் தான் வாழ்வின் வெற்றியாகவும் கருதுகிறான். இங்கும் வெற்றியைத் தவிர மற்றவைக்கு இடமில்லை. இதை சிறப்பாகப் படம்பிடித்து காட்டுகிறது கானகம் நாவல். -ஜெயமோகன், எழுத்தாளர். நன்றி: தினமலர், 28/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *