எண்ணுகிறேன் எழுதுகிறேன்
எண்ணுகிறேன் எழுதுகிறேன், டாக்டர் நா. மகாலிங்கம், ராமானந்த அடிகளார் அறக்கட்டளை, கோவை, பக். 216, விலை 155ரூ.
தொழிலதிபர் நா. மகாலிங்கத்தின் 92வது பிறந்த நாளில் வெளியிடப் பெற்ற நூல். காஷ்மீ பிரச்னைக்கு ஒரு தீர்வு என்பது முதல், வீழ்ந்த விவசாயம் விருத்தியடைய என்ற கட்டுரையோடு 21 தலைப்புகளில் நூல் நிறைவடைகிறது. மகாலிங்கம் அவ்வப்போது, ஓம் சக்தி இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். கட்டுரைகள் அனைத்திலுமே அருட்செல்வரது நாட்டுப்பற்று, ஆன்மிகச் சிந்தனை, ஆழ்ந்த அறிவியல் கண்ணோட்டம், பரந்துபட்ட உகறிவு, சமுதாய அவலங்களையும், வன்முறைகளையும் கண்டு கசிந்துருகும் உளப்பாங்கு, தெளிவாக தெரிகிறது. கடந்த, 1949களில் காஷ்மீரின் நிலை, ஐ.நா.வின் செயல்பாடுகளில் உள்ள பலவீனங்கள், தென்னக நதிகள் இணைப்பில்லாமல் தொடரும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை சாடும் கோபம் என பல பிரச்னைகளை சாதக பாதகங்களோடு விளக்கி, மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார். -குமரய்யா. நன்றி: தினமலர், 28/9/2014.
—-
இளைப்பாறும் சுமைகள், குன்றக்குடி சிங்கார வடிவேல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 138, விலை 105ரூ.
யதார்த்தங்களின் வடிவமாய் நிஜமான வாழ்வியல் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கும் அருமையான சிறுகதை தொகுப்பு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளிடம் நேர்முக எழுத்தராக பணிபுரியும் குன்றக்குடி சிங்கார வடிவேல், இந்த நூலை எழுதி இருக்கிறார். குன்றக்குடிக்கே உரித்தான குன்றாய் நிமிர்ந்து நிற்கும் சொல்நடை, குறையாத வார்த்தை வளத்தால் கதைகளை ஒரே மூசசில் படித்துவிட முடிகிறது. பதினாறு கதைகளும், பதினாறு வகையாக தோன்றுகிறது. இளைப்பாறும் சுமைகள், கொள்ளிக்காசு, நான் விற்பனைக்கல்ல, அன்பு வலி போன்ற சிறுகதைகளின் தலைப்புகள் புதுமை. பொருத்தமானவை. படிக்கத் தூண்டுகின்றன. தண்ணீரின் அவசியம், பாலீதின் பைகளால் ஏற்படும் ஆபத்தை விளக்கிடும் உயிர்த்துளி கதை நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும். -ஜி.வி.ஆர். நன்றி: தினமலர், 28/9/2014.