காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்
காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர், பா. செயப்பிரகாசம், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, விலை 180ரூ.
அசைபோடும் கதைகள் பா.செ. அவர்களின் காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் சிறுகதை தொகுப்பை படித்து முடித்தவுடன் முதலில் கவனத்துக்கு வருவது சொற்களில் இருக்கும் கச்சிதம். கத்தி போன்ற சொற்கள். ஆனால் அந்த கத்தி மெல்லிய அங்கத சுவையுடன் கதையை சொல்லிக்கொண்டே வேண்டிய இடத்தில் ஆழமாக கீறவும் செய்கிறது. சமூகத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் சாதீய சிடுக்குகளையும் அதில் மாட்டிக்கொண்டு கிழிந்து தொங்கும் மனித உறவுகளையும் பெரும்பாலான கதைகளில் காண முடிகிறது. அறுபதுகளில் தமிழகத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்த இந்தி திணிப்பு போராட்டக் கதையான காணாமல் போனவர்கள் கதையிலும் சாதி ஏற்படுத்தும் பிளவை நறுக்காக சொல்லிச் செல்கிறார். நிர்மலாவின் நாட்கள் கதையில் தங்கை, அம்மாவுடன் அதிகாலையில் டீக் கடையில் அவர்கள் அமர்ந்திருக்கும் சித்திரம் அவ்வளவு எளிதில் மனதை விட்டு அகலக் கூடியதன்று. நிர்மலாக்கள் காலம் காலமாக இப்படித்தான் நடத்தப்படுகிறார்கள். உயிர்வேலி கதையில் உயர்சாதி ஆணுடன் பச்சை குழந்தையை விட்டு வெளியேறும் பெண் மீண்டும் ஊர் திரும்பலின் நிகழ்விகளில் கோபம், பரிதவிப்பு, ஆற்றாமை நமக்கும் வருகிறது. அறிவுரை சொல்லும் தொனியிலோ, பீடத்தில் அமர்ந்து கதை சொல்லும் பாணியிலோ இல்லாமல் இக்கதைகள் நம்முடைய தோள்களில் கை போட்டுக் கொண்டு அசைபோடுகின்றன. – செப்டம்பர், 2015. நன்றி: அந்திமழை.