காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், சென்னை – 2, பக்கம் 256, விலை 130 ரூ.

பத்திரிகையாளராக இருந்து பாடலாசிரியரான கவிஞர் பழநிபாரதி எழுதிய 52 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சகலவிதமான அழுக்குகளையும் சாடும் பழநிபாரதியின் ஆக்ரோஷமான கோபம், படிப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது. இதுவே இந்நூலின் வெற்றி. நகரமயமாதல் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களும், விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அடித்துத் துரத்தி வாங்கும் பின்னணியை ‘காடு வெளையட்டும் பெண்ணே! நமக்குக் காலமிருக்குது பின்னே’ என்ற தலைப்பில் வேளாண்மை தொடர்பான கட்டுரை நூலாசிரியரின் ஆழமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ‘ஒரு பெண்ணின் போராட்டம் அவள் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது’ என்கிறார் பழநிபாரதி. கருக்கலைப்பு, கள்ளிப்பால், நெல்மணிக் கொலைகளால் எத்தனை அருந்ததிராய், மேதாபட்கர், கே.பி. சுந்தராம்பாள், மதுரை சின்னப்பிளை போன்றவர்கள் காணாமற் போயிருப்பார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார். ஒவ்வொரு கட்டுரையின் கருப்பொருளுக்கேற்ப தமிழ் மற்றும் பிறமொழிக் கவிதைகளில் பொருத்தமானவற்றை வெளியிட்டிருக்கும் உத்தி பாராட்டுக்குரியது. காற்றின் கையெழுத்தாக இருந்தாலும் கல்வெட்டாக நெஞ்சில் பதிந்து நிற்கும் சிறந்த நூல்.  

 

 இலக்கியமும் வாசிப்பும், ம. திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 1, பக்கம் 144, விலை 70 ரூ.

ஓர் இலக்கியப் படைப்பு அனைத்து வாசகர்களுக்கும் ஒரே விதமான அனுபவத்தைத் தரவேண்டும் என்ற நியதியில்லை. அவ்வகையில் தமிழ் இலக்கியப் பாடல்களில் நூலாசிரியர் தாம் பெற்ற உயர்ந்த, உன்னத அனுபவங்களை அழகான இனிய நடையில் வெளிப்படுத்தியுள்ள திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ‘சங்க அகப்பாடல்களும் கம்பராமாயணமும்’, ‘பக்தி இலக்கிய முன்னோடி காரைக்காலம்மையார்’, ‘மணிமேகலையில் நீர் ஆதாரங்கள்’ என காதல், பக்தி, சமூகம் சார்ந்த 11 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் புதுவிதம். இன்றைய நவீன உலகின் ஆய்வுப் பிரிவுகளில் ஒன்றாகப் பேசப்படும் ‘உணர்வுசால் நுண்ணறிவு’ (எமோஷனல் இன்டெலிஜென்ஸ்) அன்றைய சங்க இலக்கியப் பாடல்களிலேயே இருப்பதை ஐங்குறு நூறு, நற்றிணைப் பாடல்கள் மூலம் அறிவியலின்வழி விளக்குகிறது, ‘சங்க இலக்கியமும் உணர்வுசால் நுண்ணறிவும்’ கட்டுரை. வாசிக்கத் திகட்டாத, பாமரரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையான குற்றாலக் குறவஞ்சியில் உள்ள இலக்கிய நயத்தை சான்றுகளுடன் நயம்பட விளக்குகிறது, ‘திருக்குற்றாலக் குறவஞ்சியில் இலக்கிய நயம்’ கட்டுரை. முதல் இலங்கைத் தமிழ் நாவல் எனக் குறிப்பிடப்படும் ‘அசன்பே சரித்திரம்’ நாவலில்  பண்பாட்டுச் சித்திரிப்பு தொடர்பான கட்டுரை ஒன்றும் இந்நூலில் உள்ளது சிறப்பு. நன்றி: தினமணி 08-10-12    

Leave a Reply

Your email address will not be published.