ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும்
ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும், சேஷ. அனு. வெண்ணிலா, மேகதூதன் பதிப்பகம், சென்னை – 5, விலை 240 ரூ.
மகான்களின் சரிதங்களை, ‘இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கப் போகிறது’ என்று மனம் சலனப்படாமல் ஆழ்ந்து படிக்கவேண்டும். திருவண்ணாமலையில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து சித்தியடைந்த மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் வரலாறும் அத்தகையதுதான். வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி சுவாமிகளோடு பழகும் பேறு பெற்ற பலரின் ஆன்மிக அனுபவங்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் இந்த நூலை எழுதியுள்ள சேஷ. அனு. வெண்ணிலா. பூஜை அறை தீபம் தானே சுடர் விடும், மின் விளக்குகள் தாமே அணைந்து எரியும், பாம்பு வடிவில் சுவாமி தென்படுவார், என்றெல்லாம் ‘திகில்’ செய்திகள் உண்டு. சுவாமியின் தோற்றம், உட்காரும் முறை, உணவு முறை, ஆடைகளில் பற்றற்ற நிலை என்று வெகு விரிவாகப் பல அனுபவங்களைப் படிக்கலாம். மகானின் அன்பர்களுக்குப் பெரு விருந்தான நூல் இது.
—
பெண்களுக்கு, தொகுப்பு: ‘பொம்மை’ சாரதி, ஸ்ரீமாருதி பதிப்பகம், சென்னை – 14, விலை 90 ரூ.
பெண்கள் கருவுறுதல், பேறு காலம், பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இவற்றைப் பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன; வெளியாகிக்கொண்டும் இருக்கின்றன. வித்தியாசமான முறையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் ‘பொம்மை’ சாரதி. வாழ்க்கை நெறி பற்றிய ஆன்றோர்களின் அறிவுரைகள் உட்பட அவசியமான பல தகவல்களையும் தொகுத்துத் தந்திருக்கிறார். சுகாதார, மருத்துவக் குறிப்புகள், உடற்பயிற்சி முறைகள், சட்டப் பிரச்சினைகள், எல்லாவற்றுக்கும் நூலாசிரியர் இடமளித்திருக்கிறார். ‘பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எங்கும் எப்போதும் படிக்கலாம்’ என்னும் அறிவிப்பே, தர முத்திரையாகவும் உள்ளது. – சுப்ர. பாலன் நன்றி: கல்கி 04.11.2012