சோழர் காலத் தமிழ் மக்கள் வரலாறு
சோழர் காலத் தமிழ் மக்கள் வரலாறு, டாக்டர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, பக்கங்கள் 288, விலை 250 ரூ.
‘சோழவள நாடு சோறுடைத்து’ என்று புகழப்படும் சோழ நாட்டின் தமிழ் மக்கள் வாழ்ந்த முறை பற்றிய வரலாற்று நூலாக இந்நூல் வெளிவந்ததுள்ளது. துலோக்கோல் போன்று சீர் துக்கிப் பார்த்துத் தம் கருத்துக்களை எழுதும் இந்நூலாசிரியர் இந்நூலில் தெள்ளத் தெளிவாக, சோழ நாட்டின் அன்றையச் சமுதாய மக்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். சோழ மன்னர்களை, அவர்களின் ஊராட்சி, சமயம், கோவில்கள், பிராமணர்கள், சாதிகள், வேளாண்மை, வணிகம், வரிகள், பெண்கள் நிலை, அடிமைகள் தோன்றிய விதம், கல்வி, மரபுகள் என்று பல தலைப்புகளில் இந்நூலாசிரியர் தம் நுண்மாண் நுழை புலம் கொண்டு விளக்கியுள்ளார். நூலின் பின்னிணைப்பில் யுவான் சுவாங் குறித்த விவரம் அனைவரும் படிக்க வேண்டியதொன்றாகும். ஆசிரியரின் கடும் உழைப்பை நூல் முழுவதும் காணலாம். -டாக்டர். கலியன் சம்பத்து
அடூர் கோபாலகிருஷ்ணன் திரையில் ஒரு வாழ்க்கை, ஆங்கிலத்தில்-கவுதமன் பாஸ்கரன், தமிழில்-ராணி மைந்தன், விகடன் பிரசுரம், பக்கங்கள் 255, விலை 95ரூ
மலையாள திரைப்பட உலகில் அடூர் கோபால கிருஷ்ணன் ஒரு முக்கிய கலைஞன். இவர் இயக்கிய திரைப்படங்கள் விரல் விட்டு எண்ணிவிடக்கூடியவைதான். ஆனால், அவை அனைத்தும் உலகின் மிக முக்கிய நாடுகளின் திரைப்பட விருது பெற்றுள்ளன. அல்லது உலக திரை உலக நடுவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவை. பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் ஆதர்ச் இயக்குனர் இவர். மலையாள மொழியின் சிறந்த எழுத்தாளர்களான பஷீரின் படைப்பகளையும், தகழியின் படைப்புகளையும், சினிமாச்சுருளுக்குள் ஜீவனுடன் கொண்டு வந்த இயக்குனர். அடூர், இந்தியாவின் மிகச்சிறந்த திரை இயக்குனரானஇ வங்கக்கலைஞர், சத்யஜித்ரேயிடம் ஆசி பெற்றவர் அடூர். அவரால் வியந்து பாராட்டப்பட்டவரும் அரூர். ஆங்கிலத்தில் பிரபல திரை விமர்சகர் கவுதமன் பாஸ்பரனால் எழுதப்பட்ட இந்த, ஒரு திரைக்கலைஞரின் தொழில் தொடர்புள்ள வரலாற்றை ராணி மைந்தன் தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார். அவருடைய மொழியாற்றலைப் பார்க்க முடிகிறது. புகைப்படங்களுடன் கூடிய இந்த புத்தகம், சினிமா சார்ந்த ஆர்வம் உள்ளவர்களை நிச்சயம் கவரும். – ஜனகன் நன்றி: தினத்தந்தி, 26-ஆகஸ்ட்-2012