ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?, ச. ராசமாணிக்கம், சந்தியா பதிப்பகம், சென்னை – 83, பக்கம். 200, ரூ. 130.

To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-4.html

இந்திய துணைக் கண்டத்தின் மிக முக்கிய இஸ்லாமியத் தலைவர்களுள் முதன்மையானவர் ஜின்னா. இத்தனைக்கும் அவர் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை மேற்கொண்டதில்லை, தன் உயிலைக் கூட இஸ்லாமிய முறைப்படி எழுதியதில்லை; மசூதிக்குப் போவதை வழக்கமாகக் கொண்டதில்லை; உருது அவருக்குத் தெரியாது; குரானுக்கும் அவருக்கும் வெகுதூரம்; இஸ்லாமிய மரபுப்படி உடையணிந்ததில்லை; அவரது மனைவி ஒரு பார்ஸி; அவரது மருமகன் ஒரு கிறிஸ்தவர்; அவரது சுருக்கெழுத்தாளர் பாலக்காடு பிராமணர். அவரது அரசியல் வழிகாட்டி தாதாபாய் நெளரோஜி எனும் முஸ்லிம் அல்லாதவர். ஆனால், இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக ஜின்னா விளங்கினார்! அது எப்படி சாத்தியமாயிற்று? இந்தக் கேள்விக்கான பதில்தான் இந்தப் புத்தகம். பல்வேறு அத்தியாயங்களில் இந்தக் கேள்விக்கான பதிலை அலசியிருக்கிறார் நூலாசிரியர். ‘பிரிவினையை விரும்பாத ஜின்னா’ எனும் 10 ஆவது அத்தியாயம் இந்தப் புத்தகத்தின் மகுடம் எனலாம். காங்கிரஸை மிரட்டுவதற்கான ராஜதந்திர உத்தியாக பிரிவினைவாதத்தை ஜின்னா முன்வைத்ததையும்; பிறகு அவர் விரித்த வலைக்குள் அவரே சிக்கிக்கொண்டதையும் இந்த அத்தியாயம் விளக்குகிறது. ஜின்னாவைப் பற்றி முற்றிலும் புதிய கோணத்தில் இதுவரை அறியப்படாத ஏராளமான தகவல்களுடன் வெளிவந்திருக்கும் இந்நூல், அரசியல் விஞ்ஞான மாணவர்களுக்கும் பன்னாட்டு அரசியல் விரும்பிகளுக்கும் சிறந்த விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.  

—-

 கடற்கொள்ளையர்கள்,  பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 14, பக். 247, ரூ. 135.

சோழர்களின் காலத்தில் அடக்கப்பட்ட கடற் கொள்ளையர்கள் முதல் இந்தியப் பகுதிகளிலும் உலகின் பல பகுதிகளிலும் கோலோச்சிய கடற் கொள்ளையர்களைப் பற்றிய ஆவணமாக வெளிவந்திருக்கும் நூல். இலக்கியத்தில் கடற்கொள்ளையர்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள், அந்த புத்தகங்களின் வழிக்காட்டுதலோடு தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், கி. மு. விலேயே கடற்கொள்ளையர்களால் ஜுலியஸ் சீஸர் கைதுசெய்யப்பட்டு 40 நாள்களுக்குப்பின் ஏட்டுத் தொகை கொடுத்ததும் சீஸரை விடுவித்த சம்பவம்… என பல சுவையான சம்பவங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. பணம் மட்டுமே அவர்களின் குறியாக இருந்தாலும் அவர்களுக்குள் மதரீதியான சண்டைகள் எப்படி நிகழ்ந்தன என்பதையும் விளக்கியிருக்கிறார். ஆட்சியாளர்களே கடற்கொள்ளையர்களை ஆதரித்து சம்பவங்களும் உச்சகட்டமாக இங்கிலாந்து அரசு ‘சர்’ பட்டத்தை வழங்கிய சம்பவங்களும் திகைக்க வைக்கின்றன. பஞ்ச் டயலாக்குகள் பேசும் கடற் கொள்ளையன், சமாதனத் தூதுவனாக மாறிய கடற் கொள்ளையன், தென் சீனக் கடல் பகுதி மட்டுமில்லாமல் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கடல் கொள்ளை சாம்ராஜ்யத்தை நிறுவிய சீன கடல் கொள்ளைக்காரி ஆகியோரைப் பற்றிய தகவல்கள் வியப்படைய வைக்கின்றன. சோமாலியா கடற் கொள்ளையர்களால் அந்தப் பகுதியில், காலங்காலமாக மேற்கத்திய நாடுகளின் கழிவுகள் கடலில் கொட்டப்படுவது தடுக்கப்பட்டிருப்பதையும் நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினமணி (8.4.13).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *