நொச்சி

நொச்சி அறியப்படாத தமிழ்ப் பதிப்பாளுமைகள் ஆய்வு – ஆவணம், பரிசல் வெளியீடு, சென்னை, விலை 130ரூ.

நொச்சி நூலில் 28 பதிப்பாளுமைகள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தவிர 27 பதிப்பாளுமைகள் தொடர்பான தகவல் குறிப்புகளையும் தொகுத்து பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளனர். தமிழ்ப் பதிப்பு வரலாறு என்பது இதுவரை ஒரு சார்பாகவே எழுதப்பட்டுள்ளது. உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரப்பிள்ளை, ச. வையாபுரிப்பிள்ளை, ஆறுமுக நாவலர், இரா. இராகவையங்கார் போன்ற செவ்வியல் இலக்கியப் பதிப்பாளர்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் மட்டும்தான் பதிப்பாளர்கள் என்ற பிம்பம் தொடர்ந்து நிறுவப்பட்டுக்கொண்டே வருகிறது. இந்த ஒரு சார்பான வரலாற்றை இப்புத்தகம் தகர்த்துள்ளது. செவ்வியல் இலக்கியப் பதிப்பாளர்களையும் தாண்டி இத்துறையில் தங்கள் வாழ்நாட்களைக் கழித்த பதிப்பாளர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் காலமாற்றத்தால் பதிப்பு முறையில் நிகழ்ந்த அக/புற மாற்றங்களையும் இத்தொகுப்பு நூல் தக்க சான்றுகளோடு விவரிக்கிறது. இந்து மதத்தின் ஆன்மிகவாதியாகவும், அருளாளராகவும் தொடர்ந்து முன்னிறுத்தப்படும் இராமலிங்க அடிகள் ஒழிவிலொடுக்கம், தொண்ட மண்டல சதகம், சின்மய தீபிகை ஆகிய மூன்று நூல்களையும் பதிப்பித்துள்ளார் என்ற தகவல் இராமலிங்க அடிகளாரை வாசித்த அனைவருக்கும் தெரியும். பாடப்புத்தகங்களும் தொடர்ந்து இந்தத் தகவல்களை மட்டுமே அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தத் தொகுப்பு நூல் இராமலிங்க அடிகளாரை மிகச் சிறந்த பதிப்பாளராக நிறுவுகிறது. அடிகளார் பதிப்புத் துறையில் பல சீர்திருத்தங்களையும் முன் முயற்கிளையும் மேற்கொண்டு இத்துறையைச் செழுமைப்படுத்தியிருக்கிறார். இன்று பதிப்பு முறையில் பயன்படுத்தப்படும் பல உத்திகளுக்கு அடிகளாரே காரணமாக இருந்திருக்கிறார். ஆனால் இவர் தொடர்ந்து பதிப்புப் பணியில் ஈடுபடவில்லை என்பது வருந்தத்தக்கது. இதுபோன்ற காலத்தால் மறக்கடிக்கப்பட்ட ஆளுமைகளையும் அவர்களின் பதிப்பு முயற்சிகளையும் இப்புத்தகம் ஆவணப்படுத்தியிருக்கிறது. நன்றி: தி இந்து, 2/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *