பறவைகளும் சிறகுகளும்
பறவைகளும் சிறகுகளும், பாஸ்கர் சக்தி, கயன் கவின் புக்ஸ், சென்னை, பக். 152, விலை 110ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-865-9.html பெண்கள் பறவைகளாக… தேடல் சிறகுகளாக… நீ உன் சொந்த விஷயத்தை எழுதலாம். ஆனால் உன் எழுத்து அதை ஒரு பொது அனுபவமாக மாற்ற வேண்டும். இல்லாவிடில் அது வெறும் சுயபுராணமாகிவிடும் என்ற எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாஸ்கர்சக்தியின் அனுபவம் பொது அனுபவமாக மாறும் மந்திரம்தான் இக்கட்டுரைகளின் சிறப்பும். இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்யும் கட்டுரைகள் இவை. கிராமத்துப் பெண்களின் தனித்துவமான குணங்களைப் பற்றி சுவாரஸ்யமான மொழி நடையில் எழுதியுள்ளார் பாஸ்கர் சக்தி. எளிமை எத்தகைய அழகு, அதுவேதான் இயல்பு என்பதை ஒவ்வொரு கட்டுரையும் சொல்லாமல் சொல்கிறது. பெண்களின் உலகில் பார்வையாளனாக மட்டும் இல்லாமல் அவர்களின் இன்ப துன்பங்களை நுட்பமாக உள்வாங்கி, கண்ணீரும், சிரிப்பும் சந்தோஷமும் அவலமும் தன்னம்பிக்கையும் அதீத உழைப்பும் கொண்டவர்களாக சித்தரித்து ரசித்து எழுதியுள்ளார். கட்டுரை நெடுக வரும் இவர்கள் அனைவரும் பாஸ்கர் சக்தியின் பால்யத்தில் எதோ ஒரு வகையில் அவரைப் பாதித்தவர்கள். இப்புத்தகத்தின் சிறப்பு உண்மையும் புனைவும் சரிவிகிதத்தில் கலந்துள்ளன. இக்கதைகளில் மற்றும் கட்டுரைகளில் பெண்கள் பறவைகளாகவும் அவர்களின் வாழ்க்கைத் தேடல் சிறகுகளாகவும் உருப்பெற்றுள்ளன. புத்தகத்தின் மற்றொரு பகுதியான சிறகுகள் பகுதியும் இதுவும்கூட அனுபவப் பகிர்வுகளே. ஆனால் தனக்கு நேர்ந்த அனுபவங்களைத் துளியும் கற்பனை கலக்காமல் எழுதியுள்ளதுதான் இந்த நூலின் சிறப்பு. -உமா சக்தி. நன்றி: கல்கி, 29/6/2014.
—-
புத்த புனித காவியம், குறிஞ்சி, சென்னை, விலை 250ரூ.
2500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சித்தார்த்தர், முதுமை, கொடிய நோய், மரணம் போன்றவற்றைப் பார்த்தபோது மனம் வேதனை அடைந்தார். இதனால் மனைவி, குழந்தை, அரச வாழ்க்கையைத் துறந்தார். போதி மரத்தின் அடியில் அமர்ந்து ஞானத்தைப் பெற்று புத்தரானார். உண்மையைக் கண்டறிவதற்காக அவர் சந்தித்த சோதனைகளும், வருத்தங்களும் ஏராளம். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதை வலியுறுத்திய இந்த மகானை கிழக்காசியாவில் பெரும்பாலான மக்கள் வணங்கி வருகிறார்கள். இந்த நூலில் அவரது பிறப்பு முதல் பரி நிர்வாண நிலை வரை எழுத்தாளர் குன்றில் குமார் விரிவாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 25/6/2014.