போருக்குத் தயார்
போருக்குத் தயார், தியாகி ஐ. மாயாண்டி, பாரதி பதிப்பகம், பக். 40, விலை 50ரூ.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் நூல்கள் படிக்க படிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. போராட்ட நூல்களை படிப்பவர்களுக்குதான் இது தெரியும். அந்த வரிசையில் வந்துள்ள நூல் இது. 1939ல் வெளியானதன் இரண்டாம் பதிப்பு இப்போது வந்துள்ளது. சுயநலம் வேண்டாம். தர்க்கம் வேண்டாம். நம் நாட்டு யுத்த மந்திரி காந்திஜியின் கட்டளை பிறந்துவிட்டது. தயார் தயார் என்று மார் தட்டுங்கள். உங்கள் பளிங்கு போன்ற இருதயத்திலே வீர உணர்ச்சி பீறிட்டு கொண்டிருக்கட்டும். அகிம்சை என்ற அழிக்கப்பட முடியாத இரும்பு கவசங்களை இறுக தரித்து கொள்ளுங்கள். குண்டுத்தீயை கக்கி எம்மை குறுகி வந்த போதினும், உண்டு வீரம் எதிர்க்கவென்று ஓங்கி கொட்டு பேரிகை என சுதந்திர போராட்ட காலத்தில்தன், 22 வது வயதில் ஐ. மாயாண்டி பாரதி எழுதி, விடுதலை வேட்கையை ஏற்படுத்தி உள்ளார். தேசத்தலைவர்கள், மதுரை பரவை கிராமத்தில் 1938ல் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் காலடியில் மாயாண்டி பாரதி இருப்பது உள்ளிட்ட அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது, படிக்கவும், பார்க்கவும் ஆவலை தூண்டுவதாக உள்ளன. -மேஷ்பா. நன்றி: தினமலர், 17/8/2014.
—-
மானும் செடியும், ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 40ரூ.
குழந்தை இலக்கியத்திற்கு அரிய சேவை செய்தவர் வை. கோவிந்தன். அணில் என்ற பத்திரிக்கையை, 50களில் குழந்தைகளுக்காக நடத்தினார். இந்தப் பத்திரிக்கைக்கு பொறுப்பாசிரியராக இருந்த தமிழ்வாணன், அரும்பெரும் சாதனையாளராக உயர்ந்தார். சிறுவர் சிறுமியர்களுக்காக வை. கோவிந்தன் எழுதிய கதைகளை சிறு சிறு நூல்களாக ஆப்பிள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காற்றும் சூரியனும், பொன் முட்டையிட்ட வாத்து, குரங்கும் ஒட்டகமும், சிங்கமும் எலியும், கரடியும் தேன்கூடும், மானும் செடியும், பூனையும் நரியும், அடக்கமும் வெற்றியும், சிங்கமும் பாம்பும் ஆகிய 9 புத்தகங்கள் அழகிய படங்களுடன் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு புத்தகமும் 40ரூபாய். நன்றி: தினத்தந்தி, 13/8/2014.