போர்த்தொழில் பழகு
போர்த்தொழில் பழகு, புதியதலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், இக்காட்டுத்தாங்கல், சென்னை – 32, விலை: ரூ. 250.
“போர்த்தொழில் பழகு” என்றார் மகாகவி பாரதியார். மனித இனம் போரின் தீமைகளை உணர்ந்திருந்தாலும் சிலநேரங்களில் அடுத்தவர்கள் நம் எல்லைகளை ஆக்கிரமிக்கும் போதும், பண்பாட்டை அழிக்கிற போதும் தடுத்து நிறுத்துவதற்காகப் போர் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போரின் நெறிமுறைகளை உணர்பவனே தன்னையும், நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். நூலாசிரியர் வெ. இறையன்பு, நாற்பது அத்தியாயங்களில் போரின் பல்வேறு உத்திகளையும் விளக்குகிறார். இந்நூலில் இருக்கின்ற விவரிப்புகள் போர்க்களக்காட்சியே கண்ணெதிரில் பார்ப்பதைப்போன்ற உணர்வை உண்டாக்குகின்றன. புத்தகத்தை எடுத்தால் படிக்கும் வரை கீழே வைக்க முடியாத அளவிற்கு சரித்திரமும், குட்டிக்கதைகளும் கார்ப்பரேட் நிறுவன எடுத்துக்காட்டுகளும் உருவகக்கதைகளும் நம்மை புத்தகப் பக்கங்களோடு அடித்துச் செல்கின்றன. சுவையும், சுவாரஸ்யமும் இணைந்திருக்கும் இந்நூல் தமிழில் ஓர் அரிய முயற்சி, அனைவரும் அடிக்கடி வாசிக்க வேண்டிய பெட்டகம்.
—
ஈழம்: சாட்சியமற்ற போடின் சாட்சியங்கள், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் – 1, விலை: ரூ. 250.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை பிபிசியின் செய்தியாளாராக இலங்கையில் பணிபுரிந்த பிரான்ஸிஸ்ஹார்சன் என்பவர், ஆங்கிலத்தில், “ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இதனை தமிழில் என். கே. மகாலிங்கம் மொழிபெயர்த்து உள்ளார். இந்நூலில் 2009 – ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவங்கள் பலவற்றை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார் நூலாசிரியர். குறிப்பாக போரின் போது காணாமல் போனவர்கள், விதவைகள், அனாதை குழந்தைகள் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் சேதப்படுத்தப்பட்ட வழிப்பாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மீதும் நடந்தப்பட்ட தாக்குதல்கள், இலங்கை அரசின் அறிவிப்புகள் அடங்கிய பட்டியல்களை படிக்கும் போது நம்முடைய ரத்தம் உறைகிறது. அனைவரும் படித்து இலங்கையில் நடந்த செயல்களை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணமாகும். படித்து முடித்ததும் நம்மை அறியாமலேயே கண்ணீர் சிந்துவதை நாம் உணரமுடிகிறது. நன்றி: தினத்தந்தி (10.4.2013).