மார்கஸ் எங்கல்ஸ் பேசுகிறார்கள்

மார்கஸ் எங்கல்ஸ் பேசுகிறார்கள், எஸ்.தோதாத்திரி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 82, விலை 50ரூ.

கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் மூல நூல்கள் தற்போது கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் மார்க்சியத்தை விளக்கும் நூல்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. மார்க்சிகயத்தைப் பற்றி பிறர் எழுதிய நூல்களில் இருந்து மார்க்சியத்தை விளக்காமல், மார்க்சின் மூல நூல்களிலிருந்து மார்க்சியத்தை விளக்கினால் என்ன? என்ற எண்ணத்தின் விளைவாக இந்நூல் உருவாகியுள்ளது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. மார்க்சின் தத்துவம், அரசியல், பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் இக்கட்டுரைகள் விளக்குகின்றன. ‘கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின்தோற்றம், டூரிங்கிற்கு மறுப்பு, லுத்விக் பூயர்பாவும், ஜெர்மானியச் செவ்வியல் தத்துவத்தின் முடிவும் உள்ளிட்ட பல நூல்கள் சொல்லும் கருத்துகள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக சிலவற்றைச் சொல்லலாம். ‘அரசு என்பது மனிதனின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதல் கருத்தியல் சக்தியாகும். விடுதலைக்கான எல்லாப் போராட்டங்களும் (ஏனென்றால் ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டம் ஆகும்) இறுதியில் பொருளாதார விடுதலையில் முடிவடைகிறது. மனிதர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். இந்த வரலாற்றிற்கு உந்துவிசையாக இருப்பது வர்க்கப் போராட்டம் ஆகும். சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு உண்மையான அடித்தளத்தினை உருவாக்குகிறது. இதிலிருந்துதான் சட்டம், அரசியல் அமைப்புகள், மதம், தத்துவம், பல்வேறு கருத்துகள் ஆகியவற்றிற்கான விளக்கத்தினை உருவாக்க முடியும்’. இவை போன்ற அடிப்படையான பல மார்க்சியக் கருத்துகளை மிகச் சுருக்கமாகவும், எளிமையாகவும், தெளிவாகவும் இந்நூலில் விளக்கியுள்ளது நூலாசிரியரின் மேதமையைப் பறைசாற்றுகின்றது. நன்றி: தினமணி, 28/12/2015.

Leave a Reply

Your email address will not be published.