மௌனத்தின் சாட்சியங்கள்

மௌனத்தின் சாட்சியங்கள், சம்சுதீன் ஹீரா, பொன்னுலகம் பதிப்பகம், விலை 350ரூ.

கலவரத்தின் சாட்சியங்கள் சென்னையில் உள்ள வாசகசாலை அமைப்பின் இலக்கியப் பரிசு பெற்ற நாவல். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் அகம் புறம் இரண்டையும் விலாவாரியாகப் பேசுகிறது. யாசர் என்றொரு அப்பாவி மனிதன் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதாகி செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவித்து விடுதலையாகி சென்னை நோக்கி ரயிலில் செல்கிறான். அந்த பயணத்தில் அவன் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதே இந்நாவல். குண்டுவெடிப்புக்கு முன்னால் அதற்கான சூழல் உருவான விவரங்களை நாவலாசிரியர் சம்சுதீன் ஹீரா உள்விவகாரங்களைத் தருகிறார். யாசர் என்ற அந்த இளைஞன் பார்வையில் இந்து இயக்கங்களும் இஸ்லாமிய இயக்கங்களும் சித்திரிக்கப்படுகின்றன. வைஷ்ணவி என்கிற இடதுசாரி இயக்கப் பெண் கதாபாத்திரம் மூலமாக இடது சாரி இயக்கத் தோழர்களும் இப்பிரச்னையை நாவலுக்குள் அலசுகிறார்கள். போக்குவரத்துக் காவலர் ஒருவரைக் கொல்லும் சம்பவமும் அதன் பின்னர் இஸ்லாமிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையும் குலைநடுங்கச் செய்கின்றன. அதுவும் மருத்துவமனைக்குள்ளிருந்து யாசர் காணும் காட்சிகள், இளைஞன் ஒருவன் உயிரோடு கொளுத்தப்படுவது, உயிர் நண்பன் வெட்டிக்கொல்லப்படும் சம்பவம் என்று உணர்வுகளை வாசர்களிடம் கடத்துவதில் சம்சுதீன் வெற்றிபெற்றுள்ளார். ஒரு இடத்தில் இஸ்லாமியர்களைத் தாக்க படைதிரண்டு இந்துத்துவ வெறியர்கள் வருகையில் அவர்களை எதிர்கொண்டு ஒடுக்கப்பட்ட, எளிய பாட்டாளி மக்கள் விரட்டி அடிக்கிறார்கள். புண்ணாகிக்கிடக்கும் ஒரு நகரின் கதையை எழுதுகையில் நடுநிலைப்பார்வை மிகவும் அவசியம். அதற்குக் குறைவில்லாமல் இதுசாரிப் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் கோவையின் மதக்கலவரம் பற்றிய புரிதலைத் தருகிறது. -மதிமலர். நன்றி: அந்திமழை, 1/2/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *