ராணி மங்கம்மாள்
ராணி மங்கம்மாள், (சரித்திர நாவல்), நா. பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 176, விலை 100ரூ.
தென்னாட்டின் ஒரே பெண்ணரசியாக, வீரதீர பெண்மணியாக வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடித்து இன்றளவும் மக்கள் மனதில் அபிமானத்தைப் பிடித்திருப்பவர் ராணி மங்கம்மாள். கணவனை இழந்த பிறகு தன் திறமையாலும், புத்திசாதுர்யத்தாலும் பதினெட்டு ஆண்டு காலம் சிறப்பாக மதுரையை ஆண்ட அவருயை தீரத்தை அழகாக எடுத்துரைக்கிறது ‘ராணி மங்கம்மாள்’ வரலாற்று நாவல். மேலும் ராணி மங்கம்மாள் செய்த தான தருமங்களையும் எடுத்துரைக்கிறது. மறவர் நாட்டு மன்னர் கிழவன் ரகுநாத சேதுபதி போன்ற பகைவர்களாலும் வெல்ல முடியாத ராஜதந்திரத்திற்குப் பெயர் பெற்ற ராணி மங்கம்மாளின் இறுதிக் காலம் எவ்வளவு கொடுமையானதாகக் கழிந்தது என்பதை கதையாசிரியர் விவரித்திருக்கும் விதம் மனதைக் கனக்கச் செய்கிறது. அதேசமயம் இந்நூலில் முபவதுமாக ராணி மங்கம்மாளைச் சுற்றியே மட்டும் நாவல் நகரவில்லை. அவரது ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட பிற பகுதிகளின் நிலையையும் காண முடிகிறது. வேற்று மதக்காரர்களை எதிரியாக காணாமல் அவர் ஆதரவு அளித்தவிதம் அழகாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் சுக துக்கங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து என்றென்றும் மங்காப் புகழ் கொண்ட ராணிமங்கம்மாளின் வரலாறு, பெண்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்றால் அது மிகையில்லை. நன்றி: தினமணி, 07/3/2016.