வடகரை

வடகரை, ஒரு வம்சத்தின் வரலாறு, டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 400ரூ.

ஒரு வம்சம், 600 ஆண்டு காலத்தில் எப்படியெல்லாம் துளிர்த்தும் துவம்சம் ஆகியும் உருமாறிக்கொண்டு இருந்தது என்பதைச் சொல்லும் வரலாறு இது. புனைவுகளில் மட்டும்தான் திடுக்கிடும் திருப்பங்களும் அலற வைக்கும் அழுகைகளும் நல்லது கூடிவரும்போது குலமே கெட்டுப்போகும் அளவுக்கு இழப்புகளும் இருக்க முடியுமா? இல்லை, உண்மை வரலாற்றிலும் இப்படி படிநிலை வளர்ச்சியைப் போல நடக்கும் அல்லவா? அப்படி ஒரு குடும்பத்துக்காரராக டாக்டர் மு. ராஜேந்திரன் இருக்கிறார். எங்கோ ஓர் ஊருக்குப் போய், எவர் குலத்து கதையையோ கள ஆய்வு செய்து எழுதுவதைவிட தனது சொந்த வம்சத்தைப் பற்றி எழுதப் புகுந்தது முதல் துணிச்சல். அதில் எதையும் மறைக்காமல், உண்மையை பட்டவர்த்தனமாகச் சொல்ல முடிவெடுத்தது அடுத்த துணிச்சல். அதை லாகவமான மொழியில் சொல்லியும் காட்டியுள்ளதுதான் இந்த நூலின் வெற்றி. என் அளவுக்கு எல்லா தப்பையும் செய்தவன் யாரும் இருக்க முடியாது என்று இரண்டு அப்பத்தாக்களையும் வைத்துக்கொண்டு சொன்ன தனது அய்யாவின் வாழ்க்கையையும் மறைக்கவில்லை. இந்த உண்மைத்தன்மைதான், நூலின் கனத்தை அதிகப்படுத்துகிறது. 1861ம் ஆண்டு முதல் 1993 வரையிலான வடகரை நாட்டாமை வம்சத்தின் வரலாறு கருப்பங்குழி கருப்பாயின் கொலையில் தொடங்கி, தங்கை கலைவாணியின் கொலையில் முடிகிறது. காதலுக்காக கருப்பாயி கொலையாகிறார். தங்க நகைக்காக கலைவாணி கொலை செய்யப்படுகிறார். ஒன்று குலதெய்வமாகவும், இன்னொன்று குடும்ப தெய்வமாகவும் வணங்கப்படும் காலகட்டத்துக்குள்தான் எத்தனை சம்பவங்கள்? அய்யரம்மா வீட்டின் மூன்று கட்டு வீட்டில் யார் யார் எந்தத் தட்டு வரைக்கும் வரலாம் என்ற வரையறையும் பால் மாடு வளர்ப்பு, கிராமப் பழக்க வழக்கங்களும் ஜமீன்தார்களின் அதிகாரத்திமிரும் அப்படியே நேரில் பார்ப்பதுபோல வர்ணிக்கப்படுகிறது. கருப்பங்குழி கருப்பாயி கோயில், மூதாதையர் வாழ்ந்த வடகரை மாடி வீட்டின் தற்போதைய இடிந்த தோற்றம், தங்கள் குடும்பத்தின் பல்வேறு சச்சரவுகளுக்கு மௌனசாட்சியாக இருக்கும் திருமங்கலம் தாலுகா தாசில்தார் அறை, பல்வேறு பிரச்னைகளுக்கான ஆவணங்கள், தீர்ப்புகள், சுருளி அருவி, ஆண்டிப்பட்டி கணவாய் என வரலாறு பயணிக்கும் அனைத்து இடங்களின் புகைப்படங்களும் ஆதாரங்களாக அடுக்கி வைக்கப்பட்ட படியே எழுத்தை எடுத்து நகர்கிறது. குடும்ப வரலாறு சமூகத்தின் வரலாறு ஆகாது என்பதும் எனக்குத் தெரியும். அதேசமயம் குடும்ப வரலாற்றுக்குள் நிச்சயமாக ஒரு சமூகத்தின் வரலாற்றை நுட்பமான வாசகனால் கண்டறிய முடியும் என்கிறார் ராஜேந்திரன். இது குடும்ப வரலாறு அல்ல, சமூக வரலாறே! -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 3/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *