நவீன இந்தியாவின் சிற்பிகள்
நவீன இந்தியாவின் சிற்பிகள், தொகுப்பாசிரியர் ராமசந்திர குஹா, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 525,விலை 400ரூ.
இந்தியா நவீனமாக மாறியதற்கு யார் யார், எப்படி எல்லாம் காரணம் என்பதை, அந்தக் காரண கர்த்தாக்களே தங்கள் எழுத்து, பேச்சு, செயல் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தியவற்றின் தொகுப்பே இந்நூல். காந்திஜி, நேரு, அம்பேத்கர், மோகன்ராய், சையது அஹமது கான், கோகலே, ஜின்னா, ஜெ.பி., தாகூர், ராஜாஜி, கோல்வல்கர், ஈ.வெ.ரா. பெரியார் என்று பலர் குறித்தும், அவர்களது வெளிப்பாடுகள் குறித்தும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தாலும், தேசவளர்ச்சியில் ஒத்த சிந்தனை உடையவர்களாகவே திகழ்ந்தார்கள். இவர்கள் அனைவரும் விடுதலைப் போராட்ட வீரர்களாக இருந்தாலும், அது குறித்து இந்நூல் அதிகம் பேசவில்லை. நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பிரச்னைகளை அகற்றுவதில் இந்தத் தலைவர்கள், அவரவர் கோணத்தில் எப்படி போராடினார்கள் என்பதே அதிகம் விவரிக்கப்படுகிறது. மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள், ஜாதி – மதம் – இனம் – மொழி குறித்த பிரச்னைகள், பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, பழங்குடியினரின் பிரச்னைகள்… என்று பல முக்கியப் பிரச்னைகள் இதில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. சுமார் 200 ஆண்டு கால இந்திய வரலாற்றையும் அதன் பிரச்னைகளையும் படிக்க போராடிக்காமல், எளிய நடையில் கூறியுள்ளது சிறப்பானது. விருதுக்கான தகுதியுடைய நூல் என்றும் கூறலாம். -பரக்கத். நன்றி: துக்ளக், 6/5/2015.