ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட்

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட், நியாண்டர் செல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ150.

இன்றைய நமது உணவுமுறை உடல் நலனுக்கு எதிராக உள்ளது. எனவே இன்றைய உணவுமுறையை மாற்றி ஆதி மனிதன் உண்ட உணவுகளை உட்கொண்டால் (அதுதான் பேலியோ டயட்) இன்று நாம் சந்திக்கும் பல உடல்நலப் பிரச்னைகள் பலவற்றைத் தீர்த்துவிடலாம் என்று கூறும் நூல்.

நூலில் கூறப்படும் பல கருத்துகள் மிகவும் வித்தியாசமாகவும், பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன. இட்லி, சப்பாத்தி உடலுக்கு நல்லது என்பதற்கு மாறாக, “இட்லி, சப்பாத்தியால் உடல்நலனுக்கு எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. ஆனால் இவற்றினால் ஏற்படும் தீமைகள் அளவற்றவை. மனிதனுக்கு வரும் பல வியாதிகளுக்கு இவை காரணமாக அமைகின்றன’ என்கிறது நூல். “உடற்பயிற்சியினால் எடை இறங்கும் என நினைப்பது மிக மிகத் தவறு’’, “உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் எனில் நாம் நிறுத்த வேண்டியது உப்பை அல்ல, சர்க்கரை மற்றும் தானியத்தை’’- இப்படிச் சொல்கிறது நூல்.

இந்த உணவுமுறைக்கு மாற்றாக உள்ள உணவுதான் பேலியோ டயட். முழுக்க முழுக்க அசைவ உணவை வலியுறுத்தும் இந்த உணவுமுறை சரியானதுதானா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இன்று கிடைக்கும் அசைவ உணவுகள் எந்த அளவுக்கு ரசாயனக் கலப்பில்லாதது, நோய்களை ஏற்படுத்தாதது என்ற ஐயமும் ஏற்படுகிறது.

அசைவ உணவு சாப்பிடாதவர்கள் “சைவ பேலியோ’’ உணவைச் சாப்பிடலாம் என்று அது பற்றிய விவரங்களைக் கூறும் இந்நூலின் முன் பகுதியில், “இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி அதனால் ஏதேனும் இழப்புகள், பின் விளைவுகள் போன்றவை நேரடியாகவோ, மறைமுகவோ ஏற்பட்டால் அதற்கு நூலாசிரியரும் பதிப்பாளரும் எந்தவகையிலும் பொறுப்பு அல்ல’ என்று குறிப்பிட்டிருப்பது புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் உணவுமுறையைப் பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நன்றி: தினமணி, 8/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *