சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், அழகர் நம்பி,  சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.504, விலை ரூ. 450.

சாணக்கியர் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்‘ நூல், அரசு நிர்வாகம், பொருளாதாரம் பற்றிப் பொதுவாகப் பேசினாலும், ஓர் அரசனின் கடமைகளில் தொடங்கி, கீழ்மட்ட அரசு அலுவலர்களின் பணிகள் வரை தெளிவாக விவரிக்கிறது.

அரசனின் பாதுகாப்பு, அரச ஊழியம், வாரிசு முறை, அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள், கருவூல அதிகாரிகள், வேளாண்மை, காடு வளர்ப்பு, சட்டமும் நீதியும், மண வாழ்க்கை, குற்றப் புலனாய்வு, பாலியல் குற்றங்கள், ராணுவ அமைப்பு போன்ற எல்லாப் பிரிவுகள் குறித்தும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

சாணக்கியரைப் பொருத்தவரை அரசனும் அரசும் வேறு வேறல்லர். குடிமக்களின் மகிழ்ச்சியில்தான் கோலோச்சும் மன்னனின் மகிழ்ச்சி இருக்கிறது. அவனுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும். தனது தலைமைப் பண்பு, அறிவுத்திறன், குணச்சிறப்புகள் மூலம் அரசன் உலக நன்மைக்குப் பாடுபட வேண்டும். தான் அரச தர்மத்தை கைக்கொள்வதோடு, மக்கள் தங்களுக்குரிய தர்மத்தைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதையும் அரசன் சோதித்தறிய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

அரசாங்கம், சமூகம் போன்றவற்றைப் பற்றி மட்டுமல்லாது, ஆண் – பெண் என்கிற தனி நபர்கள் பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார் சாணக்கியர்.

சாணக்கியர் காலத்துப் பெண்கள் இன்றைய பெண்களைவிட அதிக உரிமை பெற்றிருந்தார்களா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அப்போது மறுமணம், சொத்துரிமை போன்றவற்றில் பெண்கள் நிலை சிறப்பாக இருந்துள்ளது. ஆயினும், எல்லாரிடமும் பணிந்து நடப்பது, ஆண்களையே சார்ந்திருப்பது, வழிவழியாகப் பின்பற்றிவந்த மரபுகள், கட்டுப்பாடுகள் போன்றவை அவர்களை உரிமையற்றவர்களாக வைத்திருந்ததையே காட்டுகின்றன.

நாட்டுக்கும் அரசனுக்கும் கூறப்பட்ட அறநெறிகளின் தொகுப்பு என்று இந்நூல் அறியப்பட்டாலும் ஒவ்வொரு தனி மனிதனுக்கான ஒழுகலாறுகளையும் வரையறை செய்துள்ள நூல் இது என்பதே உண்மை.

நன்றி: தினமணி, 28/5/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026468.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.