இருளர்களும் இயற்கையும்
இருளர்களும் இயற்கையும், சி.மஞ்சுளா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 150ரூ.
தமிழகப் பழங்குடிகளில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்டவர்கள் இருளர்கள். இரண்டாவது நிலையில் இருந்தாலும் இவர்களுடைய எண்ணிக்கை என்னவோ ஒன்றரை லட்சம்தான். தமிழகத்தில் அருகிவரும் ஆறு பழங்குடிகளில் ஓர் இனமாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
‘இருளர்கள் என்றால் பாம்பு பிடிப்பவர்கள்’ என்பதுதான் பொதுச் சித்திரம். அதேநேரம் தாவரங்களை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்திவரும் இவர்களது மரபு அறிவைப் பற்றி ஆராய்ச்சி அடிப்படையில் முனைவர் சி. மஞ்சுளா ‘இருளர்களும் இயற்கையும்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதுபோன்ற புத்தகங்கள் தமிழில் அரிது. மூத்த தாவரவியல் பேராசிரியர்கள் பி. தயானந்தன், டி. நரசிம்மன் உள்ளிட்டோர் இந்த ஆய்வுக்கு வழிகாட்டியுள்ளனர்.
இருளர் மருத்துவம் அதிவேகமாக அழிந்துவரும் நிலையில், அவர்களுடைய அடுத்த தலைமுறை தங்கள் மருத்துவ அறிவின் மேன்மையை வாசித்தறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூல் வெளியாகியுள்ளது.
தனி அறிவு
மூலிகை குறித்த அறிவால்தான் பழங்குடிச் சமூகங்களிலேயே இருளர்கள் தனித்து விளங்கினர், அதையே வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ளனர் என்கிறது இந்த நூல்.
சித்த மருத்துவ முறையில் பயன்படுத்தப்படும் காயகற்ப மூலிகைகள் இருளர் மருத்துவ முறையிலும் உண்டு. இருளர் பயன்படுத்துத்தும் 388 மூலிகைத் தாவரங்களில் மற்ற மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படும் தாவரங்கள்: சித்தா (230), ஆயுர்வேதம் (210), யுனானி (69). இதுபோன்ற தகவல்கள் இருளர் மருத்துவத்துக்கு உள்ள முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகின்றன.
பூச்சிக்கடி, விஷமுறிவு சார்ந்த மருத்துவத்தில் இருளர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதற்கு இயற்கை, குறிப்பாக மூலிகைகள் குறித்த அவர்களுடைய பரந்த அறிவே காரணம். அவர்களுடைய உணவுப் பழக்கங்களும் சுற்றுச்சூழல் குறித்த அறிவைப் பிரதிபலிக்கின்றன. இருளர்கள் உணவுக்காக 94 வகைத் தாவரங்களையும், மனித மருத்துவத்துக்கு 341 தாவரங்களையும், கால்நடை மருத்துவத்துக்கு 38 தாவரங்களையும் பயன்படுத்துவதாக இந்தப் புத்தகம் கூறுகிறது.
அத்துடன் மீன் பிடிக்க, நார் எடுக்க, வீடு கட்ட, நெருப்பை உருவாக்க, விளக்கேற்ற, வேட்டையாட, விலங்குகளைப் பிடிக்க, ஆபரணங்கள் செய்ய, தண்ணீரைத் தூய்மைப்படுத்த என நகரவாசிகள் சற்றும் யோசித்துக்கூடப் பார்க்காத பல்வேறு வகைப் பயன்பாடுகளுக்கு தாவரங்களை இருளர்கள் பயன்படுத்துகின்றனர். மருத்துவ, உணவுப் பயன்பாடுகளுக்காக இயற்கை வளங்களைச் சார்ந்து இருந்தாலும், அவற்றைச் சுரண்டாமல் நிலையான வகையில் இவர்கள் பயன்படுத்தி வருவதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
உயிர் தப்புமா?
இருளர்களின் இயற்கை அறிவு சார்ந்து மட்டுமில்லாமல், சமூகவியல்ரீதியிலும் பல புதிய புரிதல்களை இப்புத்தகம் தருகிறது. பெண் கருவுறாமல் இருந்தால் மலடி என இருளர்கள் ஒதுக்குவதில்லை. அதேபோல் கருச்சிதைவு செய்வதையும் இருளர் மருத்துவர்கள் பாவமாகக் கருதுகிறார்கள். மற்ற சமூகங்களைப் போன்று ஆண்-பெண் சமத்துவமின்மை இருளர் சமூகத்தில் ஆழமாக வேரோடவில்லை.
மூலிகை சேகரிப்பது, மருந்துகள் செய்முறை, நோயாளிகளுக்கு வைத்தியம் செய்யும்போது வாரிசுகளை இருளர் மருத்துவர்கள் உடன் வைத்துக்கொண்டு கற்றுத் தருகின்றனர். ஒருவேளை ஆண் வைத்தியர் இறந்துவிடும் நிலையில், அவருடைய மனைவியே முதன்மை மருத்துவராகி சிகிச்சை தருகிறார்.
பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான இருளர்களின் பாம்புகளைக் குறித்த அறிவு பிரபலமானது. அதேநேரம் பாம்புக் கடிக்கு இவர்கள் பார்க்கும் மருத்துவம் குறித்து பிரபல ஊர்வன அறிஞர் ரோமுலஸ் விட்டேகரின் கருத்தையும் நூலாசிரியர் தந்திருக்கிறார். “பெரும்பாலும் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தினால்தான் இறக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள நான்கு பெரிய நச்சுப்பாம்புகளின் கடிக்கு மூலிகைத் தீர்வு அளிக்காது” என்கிறார் விட்டேகர். ஒருபுறம் மரபு அறிவின் முக்கியத்துவத்தைப் பதிவுசெய்துள்ள இந்தப் புத்தகம், மற்றொருபுறம் அறிவியல் அடிப்படைகளில் இருந்தும் விலகாமல் எழுதப்பட்டுள்ளது.
உலகமயமாக்கல் முடிந்து கால் நூற்றாண்டு முடிந்த நிலையில் இருளர் பழங்குடிகளுடன் சேர்த்து, அவர்களின் மருத்துவத்துக்கு அடிப்படையாக இருக்கும் தாவரங்களும் இயற்கை நிலப்பரப்பும் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன. வேம்பு, மஞ்சள் போன்றவற்றின் மருத்துவக் காப்புரிமை பறிபோகாமல் பாதுகாத்துவிட்டோம்.
ஆனால், இதுபோல் பழங்குடிகளிடம் இன்னும் எஞ்சியுள்ள, நம் மூதாதைகள் விட்டுச் சென்ற மரபு அறிவின் முக்கியத்துவத்தை இப்போதாவது உணர்வோமா, அவற்றைப் பாதுகாக்க ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். இல்லை, அருகிவரும் உயிரினங்களைப் போல இருளர் மருத்துவமும் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிடுமா என்பது தெரியவில்லை.
நன்றி: தி இந்து.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027061.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818