கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும்
கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும், ம.லெனின், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.220, விலை ரூ.222.
முழுநேரமும் கணினி முன் அமர்ந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வீடுகளிலும் கூட கணினிகள் நிறைய வந்துவிட்டன. போதாதற்கு மடிக் கணினிகளைச் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்த முடிகிறது. கணினி நமது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது.
கணினியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் பாதிப்புகள், உடல் வலி, மன இறுக்கம், உடல் களைப்பு ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்களை இந்நூல் விளக்குகிறது.
கணினியால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க, நிறுவனத்தில் வேலை செய்பவர்கள், நிறுவனத்தை நடத்துபவர்கள் தனிப்பட்ட முறையிலும், சூழலை மாற்றியமைப்பதிலும் செய்ய வேண்டியவை எவை? என்பதை நூல் மிக எளிமையாக விளக்குகிறது.
கீ போர்டு, மெளஸ் ஆகியவற்றைச் சரியாகப் பயன்படுத்தும் முறைகள், கணினித் திரைக்கும் கணினியில் வேலை செய்பவருக்கும் இடையில் இருக்க வேண்டிய தூரம், உயரம், கணினியில் வேலை செய்பவர் நாற்காலியில் எவ்விதம் அமர வேண்டும்? தொடர்ந்து பல மணி நேரங்கள் கணினியின் முன் அமர்ந்து வேலை செய்யாமல், சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு வேலை செய்வதால் உடலிலும், மனதிலும் ஏற்படக் கூடிய மாறுதல்கள், கணினிகள் நிறைந்துள்ள அலுவலக அறைகளில் விளக்குகளை அமைக்கும் முறை, காற்றோட்டம், உள் அலங்காரம், ஒரு கணினிக்கும் இன்னொரு கணினிக்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்? என்பன போன்ற அனைத்தையும் பொருத்தமான படங்களுடன் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
கணினித்துறை சார்ந்த அனைவருடைய கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.
நன்றி: தினமணி,5/6/2017.