குறுந்தொகை

குறுந்தொகை, இரா.பிரபாகரன், காவ்யா, பக். 667, விலை 700ரூ.

தமிழ் இலக்கியங்களை வாஷிங்டன் வட்டார மக்கள் படிக்கும் வகையில் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் என்ற அமைப்பை, 2003ல் உருவாக்கி அவர்களுக்கு புறநானுாறு மற்றும் சங்க இலக்கியங்களை போதித்துத் தமிழ்ப் பணியாற்றி வரும் முனைவர் இர.பிரபாகரன் நம் இலக்கியப் பரப்புரை முயற்சியில் மகுடமாகப் படைக்கப்பட்டது தான் இந்நுால்.

மேலும், 402 பாடல்களைக் கொண்ட குறுந்தொகைக்கு உரை எழுதிய சவுரிப்பெருமாள் அரங்கனார், உ.வே.சாமிநாதய்யர் வரிசையில் இவரது உரை, 10வது இடம் பெறுகிறது.

இறையனார் பாடிய, ‘கொங்கு தேர் வாழ்க்கை’, செம்புலப்பெயர் நீரனார் பாடிய ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ (குறுந்தொகை பாடல் 40, இப்பாடல் முழுமையும் லண்டன் மாநகரின் தொடர் வண்டி நிலையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது (பக்.7).

ஆலங்குடி வாகனார் பாடிய, ‘கையும் காலும் துாக்கத் துாக்கும் ஆடிப்பாவை போல’, பெருங்கடுங்கோ பாடிய ‘வினையே ஆடவர்க்குயிரே’, அள்ளூர் நன்முலையார் பாடிய, ‘நோமென் நெஞ்சே, நோமென் னெஞ்சே’ போன்ற, 402 பாடல்களைப் பாடிய, 205 புலவர்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது.

நுாலின் பொருளைத் திரட்டிச் சுருங்கக் கூறும் பொழிப்புரை, விவரித்துக்கூறும் அகல உரை, நுட்ப உரை, மேற்கோளுடன் தருக்க முறையில் கூறும் எச்சவுரை என்னும் நான்கு வகை உரைகளையும் இதில் காணலாம்.

சில பாடல்களுக்கு திணை அல்லது கூற்று பொருத்தமாக இல்லை (பாடல்கள் 89, 157, 177, 189, 271, 321, 336, 340) என்று கருதியவற்றை நுாலாசிரியர் சுட்டிக் காட்டவும், பாட பேதங்களை ஆராயவும் செய்துள்ளார். நுாலாசிரியரின் கடின உழைப்பு நுால் முழுவதும் எடுத்தாண்டுள்ள உரை வளத்தால் மேன்மை பெற்றுள்ளது.

புலம் பெயர்ந்த தமிழர்களிடையே திருக்குறள், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய நுால்களைப் பரப்பும் முயற்சியில் அயராது பாடுபட்டு வரும் நுாலாசிரியர் சங்க கால மரபுகளையும், வழக்காறுகளையும், நம்பிக்கைகளையும் ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளதன் மூலம் தமிழர் நெறியை அழகுற மீட்டுருவாக்கம் செய்துள்ளார்.

சிவயோகி ரத்தினசபாபதிப் பிள்ளையின் புதல்வர், மாணவர் என்னும் கூடுதல் சிறப்பைப் பெற்ற நுாலாசிரியர், இந்நுால் தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் நன்நுால். நுாலாசிரியரின் தமிழ்ப் பணி மெச்சத் தகுந்தது.

– பின்னலுாரான்.

நன்றி: தினமலர், 26/11/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *