மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்க

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம், அ.கா. பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 94, விலை 70ரூ.

கடந்த, 47 ஆண்டுகளுக்கு முன், மனோன்மணியம் நாடக நூலில் பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய, ‘நீராடும் கடல் உடுத்த’ பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., அறிவித்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் மோகன ராகத்தில் திஸ்ரம் தாளத்தில் இசையமைத்திருந்தார். இந்த செய்தியுடன், இந்நூல் துவங்குகிறது.

சிலப்பதிகாரமும், பதிற்றுப்பத்தும் சேர நாட்டுக்கு உரியதாக இந்நூல் ஆய்கிறது.
கேரளத்தில் ஆலப்புழை, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர் தமிழறிஞர் சுந்தரம் பிள்ளை. அவர், 42 ஆண்டுகளே வாழ்ந்த சுந்தரனார், மனோன்மணியம் நாடகம் (1891), நூற்றொகை விளக்கம் (1888) இரு நூல்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், 650 பக்கத்திற்கு ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

கல்வெட்டு ஆராய்ச்சி, கால ஆராய்ச்சி செய்துள்ளார். சுவாமி விவேகானந்தரை, 1892ல் சந்தித்துள்ளார்.

சுந்தரனார், தன் வாழ்வில் குருவாக விளங்கிய, கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள், பேராசிரியர் ஹார்வியைப் பெரிதும் போற்றினார். தன் சமகாலத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான கால்டுவெல், ஜி.யூ.போப், ஆறுமுக நாவலர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மறைமலை அடிகள், உ.வே.சா., ஆகியோருடன் பழகி தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.

செங்கோட்டையிலிருந்து, 76 மைல் தூரம், மாட்டுவண்டியில் திருவனந்தபுரத்துக்கு அழைத்து வந்து மறைமலை அடிகள், நாராயணசாமி பிள்ளை இருவரையும், மனோன்மணியம் சுந்தரனார் போற்றியுள்ளார். திருஞானசம்பந்தர் கி.பி., 700, சிறுத்தொண்டர் கி.பி., 642 என்ற கால ஆய்வு முடிவுகள் தெளிவாக தரப்பட்டுள்ளன.

‘அன்பின் அகநிலை’ என்ற தலைப்பில் சுந்தரனார், பாடல்களையும் இனிதாக இயற்றியுள்ளார்.

நூலின் பின் இணைப்பில், சிவகாமியின் சரிதம், மனோன்மணியம் கதைச் சுருக்கங்களும் அவரது பாடல்களும், கடிதங்களும் தரப்பட்டுள்ளதைப் படித்தவர்கள் தெளிவு பெறுவர். சுந்தரனாரின் தமிழ்ப் பணிகளைக் கூறும், சுந்தர நூல் இது!

– முனைவர் மா.கி.ரமணன்.

நன்றி: தினமலர், 19/2/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *