முத்தொள்ளாயிரம் உரை வரலாறு

முத்தொள்ளாயிரம் உரை வரலாறு (1943-2018); நூலாசிரியர்:அ.செல்வராசு; காவ்யா, பக்.96; விலை ரூ.100.

மூவேந்தர் குறித்த பாடல்களைக் கொண்டது முத்தொள்ளாயிரம். 2,700 பாடல்களில், கிடைக்கப்பெற்ற பாடல்கள் 130 மட்டுமே. இவற்றுள்ளும் சில கருத்து வேறுபாடுகள், பாட வேறுபாடுகள் உண்டு. 1943-இல் டி.கே.சிதம்பரநாத முதலியார் முதன்முதலில் எழுதிய உரையில் தொடங்கி, 2018 -வரை மொத்தம் 17 பேரின் உரைகளில் அவர்களால் பின்பற்றப்பட்டுள்ள இலக்கண – இலக்கியக் கூறுகளை முத்தொள்ளாயிரம் உரை நூல் விரித்துரைக்கிறது.

முதன் முதலாக (1905) ரா.இராகவையங்காரால்தான் முத்தொள்ளாயிரம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. "புறத்திரட்டு என்ற ஏடுகளில் இருந்த முத்தொள்ளாயிரச் செய்யுள்களைத் தொகுத்து அவர் பதிப்பித்தார். அதேபோல,  முத்தொள்ளாயிரத்துக்கான முதல் உரை டி.கே.சிதம்பரநாத முதலியாருடையது.

அவரது உரையில்,தலைப்பிட்டிருத்தல், பாடல் கருத்தைத் தருதல், அடிக்குறிப்பில் தொடர்களுக்குப் பொருள் தருதல், குறிப்புத் தருதல், நாடகத் தன்மையோடு பொருள் கூறுதல், பாடலில் கூற்று இடம் பெற்றிருப்பதைக் குறித்துக் காட்டல், பாடலின் சுவையை அல்லது அணிநலத்தைக் கூறுதல் முதலியவற்றைப் பின்பற்றி உரை அமைந்துள்ளவிதத்தை டி.கே.சிதம்பரநாத முதலியார் உரைகள் பகுதி எடுத்துரைக்கிறது.

மற்ற 16 பேர் உரைகளிலும் மேற்குறித்த கூறுகளில் சில ஒத்துள்ளன என்றாலும், பிறநூற் பாடல்களை ஒப்பிட்டுக் காட்டுதல், அணிநயம் உரைத்தல், இலக்கணக் குறிப்பு தருதல், பாடவேறுபாட்டைச் சுட்டுதல், உரையின் நோக்கம், ஒப்புமைப் பகுதி, புதுக்கவிதை வடிவம் முதலியவை வேறுபடுவதைக் காணமுடிகிறது.

முத்தொள்ளாயிரம் பதிப்பு வரலாறு நூலில், 1905- ரா.இராகவையங்கார், 1935- மு.இராகவையங்கார், 1939- எஸ்.வையாபுரிப்புள்ளை, 1943-டி.கே.சிதம்பரநாத முதலியார் எனத் தொடங்கி, 23 பேரின் முத்தொள்ளாயிரப் பதிப்பின் தன்மைகள், மாற்றங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

பாடல் வைப்பு முறையில் அவரவரது நுகர்வுத் தன்மைக்கு ஏற்ப காணப்படும் பல மாற்றங்களை எடுத்துக்காட்டி, முதன்மைப்படுத்தும் நோக்கத்தில் இந்நூல் அமைந்திருக்கிறது.

ரா. இராகவையங்கார் முதன்முதலில் பதிப்பித்த முத்தொள்ளாயிரம் மூல நூலும், பாடவேறுபாடு தொடர்பான அட்டவணையும் பின்னிணைப்பில் இணைத்திருப்பதுடன், இவ்விலக்கியம் தொடர்பாக இனிவரும் காலங்களில் செய்ய வேண்டியனவற்றையும் பட்டியலிட்டிருக்கிறார் நூலாசிரியர்.

நன்றி: 27/5/19, தினமணி.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.