முதுவர் வாழ்வியல்

முதுவர் வாழ்வியல், முனைவர் க.முத்து இலக்குமி, திருக்குறள் பதிப்பகம், பக். 216, விலை 160ரூ.

தமிழக பழங்குடி மக்களான முதுவர் இனத்தை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். எட்டு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழக – கேரள எல்லையில் வாழும் பழங்குடியினர் வாழ்க்கை தனித்துவமானது. இந்த மக்களின் பழக்கவழக்கங்களை ஆராயும் நுால்கள் பல வந்துள்ளன. அவை, தமிழகத்தின் பன்முகத்தை காட்டும்.

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் முதுவர் என்ற பழங்குடி மக்கள் வாழ்க்கை பற்றிய புத்தகம் இது. இவர்கள் வசிக்கும் கிராமங்களில் சென்று, நேரடியாக பழகி, அன்றாட செயல்பாடுகளில் பண்பாட்டை கண்டு உணர்ந்து, விசாரித்து தெளிந்து எழுதியுள்ளார். சமூக வாழ்க்கை, குடியிருப்பு அமைப்பு, உணவு பழக்கம், தொழில், வேட்டையாடுதல் என பல வித தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

உணவில், நண்டு ரசம் பற்றிய தகவல் சுவையானது. இயற்கையுடன் வாழும் விதம் இனிமை தருகிறது. பெண்களுக்கான பூப்பு சடங்கில், ‘பூப்படைந்த பெண்ணுக்கு, புதிய புடவை அணிவிக்கும் சடங்கை, பெண்கள் கூடி நடத்துவர். முந்தானையின் இரு முனைகளையும், வலது தோளின் மேற்பகுதியில் வருமாறு முடிச்சு போடுவர். இதை, குறக்கட்டு என்கின்றனர். அன்று முதல், திருமணமாகி, முதல் குழந்தைக்கு தாயாகும் வரை, அந்த முறையிலே புடவை அணிய வேண்டும்…’ என குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை வளர்ப்பு நடைமுறையில், ‘பிறந்த மூன்றாவது நாளில், குழந்தையை முதுகில் கட்டிக் கொள்கிறார் தாய். அது நடக்கும் பருவம் வரும் வரை, முதுகிலேயே வளர்கிறது. தாய் உறங்கும் நேரம் தவிர, முதுகை விட்டு இறங்குவதில்லை…’ என்று, பொறுப்புணர்வை வியந்துள்ளார். பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியம், கதைப்பாடல், மரபு சடங்குகள் என, பலவற்றையும் தொகுத்துள்ளார். ஆய்வு அனுபவத்தையும் எழுதியுள்ளார். மானுடவியல் ஆய்வாளர்களுக்கு இது பாடம். மானுடவியல் தொடர்பான முக்கிய நுால்.

– அமுதன்

நன்றி: தினமலர், 19/7/20.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *