பனைமரம்

 

பனைமரம், முனைவர் இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 758, விலை 800ரூ.

தமிழர் வாழ்வியலில் பனைமரத்தின் பயன்பாடு என்பது, ஒரு பண்பாட்டும் பயில்வு நிலையாகவே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அகமாயினும் புறமாயினும் மானுட வாழ்வின் பல்வேறு படிநிலையாக்கங்களிலும் பனைமரத்தின் செயல்பாடு நீடித்திருப்பதை எண்ணற்ற சான்றுகள் வாயிலாக எடுத்துக்காட்ட இயலும்.
குறிப்பாக தமிழர் அறிவும் பாரம்பரியத்தின் களஞ்சியமாகத் திகழும் பல்வேறு எழுத்தாக்கங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் காத்த பெருமை, பனைமரத்தின் ஓலைகளால் ஆன சுவடிகளையே சேரும். தமிழ்ச்சுவடி மரபே உலக நூலாக்கத்தின் உயர் தொழில் நுட்பமாக பல்லாண்டுகள் வழக்கிருந்த வரலாற்றை அறிகின்றோம். அவ்வகையில், டாக்டர் இரா. பஞ்சவர்ணம் ஆக்கியுள்ள ‘பனைமரம்’ என்னும் நூல் தமிழ்ச்சூழலில் வரவேற்றுப் போற்ற வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.

தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் என்னும் பொதுத் தலைப்பில் தனது நூலாக்கங்களை அளித்து வரும் ஆசிரியர் முன்னரே அரசமரம் குறித்தும், சிறுதானியத் தாவரங்கள் என்னும் மையப் பொருளில் கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, சாமை, சிறுசாமை, பனிவரகு, பெருஞ்சாமை, சோளம், தினை, வரகு, பலா எனப் பல்வேறு தாவரங்களின் பயன்பாடு வரலாற்றை நுணுக்கமாக ஆய்ந்து அளித்துள்ளார் என்பது, இவ்விடம் பொருத்தப்பாடு உடையதாகும்.

வெப்ப மண்டலத்தின் வறட்சியையும் தாங்கிக் கொண்டு பெருமளவில் நீருண்ணாமல் தானாகவே வளர்ந்து பயன் தரக்கூடிய மண்ணுலகத் கற்பகத் தருவாக பனை மரத்தை ஆசிரியர் இந்நூலில் இனம் காட்டுகிறார் ‘பனை பாதாதி கேசத்திற்கும் பலன் அளிக்கும்’ என்னும் பழமொழியை எடுத்துக்காட்டி பனைப் பயன்களைப் பட்டியலிடும் ஆசிரியர், அதன் அடிமுதல் முடிவரை அத்துணைப் பொருள்களும் மானுடப் பயன்பாட்டிற்காகவே என்பதனை நிறுவியுள்ளார்.

தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்கள் அற இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என தொன்று தொட்டு தமிழ்ச்சூழலில் அவ்வக்கால மானுட வாழ்வியலில் பனை மரம் பெற்றிருந்த பண்பாடு ஏராளமானவை.

தொல்காப்பிய உயிர் மயங்கியலில், ஐயிறுதிச் சொற்கள் பெறும் புணரியல் மாற்றங்களை விளக்க முற்படுகையில், ‘பனை’ என்னும் சொல்லை எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியர் எடுத்தாள்வதை எண்ணும்போது, பனை என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர் வாழ்வியலோடு இணைந்து பயணித்து வருவதென்பதைக் கருதமுடிகிறது.

அதே போல பண்டைய அளவுப் பெயர்களில் பனைக்குச் சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ள பாங்கினை அறியமுடிகிறது. திருவள்ளுவரும் அளவில் குறைந்த ஒன்றைக் குறிக்கத் தினையளவு என்றும் அளவு கடந்த / மிகுந்த ஒன்றைக் குறிக்க பனையளவு என்றும், காட்டுவதை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களில் உள்ள நச்சுத்தன்மையை இனம் கண்டு அவற்றைப் புறந்தள்ளி பண்டு தொட்டுப் பருகிவரும் பதநீர்ப் பயன்பாட்டிற்கு மக்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தை எடுத்துக் காட்டும் ஆசிரியர், பதனீரால் உடல் ஆரோக்கியம் மேம்படும் மருத்துவ குறிப்புகளையும் விளக்க முனைந்துள்ளார்.

குறிப்பாக ஆண்மரத்தில் இருந்து மட்டுமே கள், பதனீர் பானங்களை எடுத்துப் பயன் கொள்ள வேண்டும் என்றும், பெண் மரத்தின் வாயிலாக நுங்கு, பனம்பழம், பனங்கொட்டை, பனங்கிழங்கு போன்றவற்றைப் பெற்றுப் பயன் கொள்ள வேண்டும் எனவும் வரையறுத்துக் கூறுவது முக்கிய கவனம் பெறுவதாகும்.

மண்ணுக்கு கேடினை விளைவிப்பதோடு, மண்ணோடு மண்ணாக மட்கிப் போகாமல் நீர் ஆதாரத்தை கெடுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை விட்டொழிய, பனைமரத்தின் பொருட்களால் ஆன, பைகளை பயனபடுத்தச் சொல்வது, ஆசிரியரின் சுற்றுச்சூழலியல் பார்வையை படம் பிடித்துக் காட்டுகிறது.

நற்றிணையில், தொன்று உரை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்கு மடற்குடம்பை (303, 3-4) என, வரும் அடிகள் இக்கருத்தை மெய்ப்பிப்பதாக அமைகிறது. இதைப்போல சேர மன்னர்கள் தங்கள் ஆட்சியதிகாரத்தைப் பறைச் சாற்றும் வெற்றிக் கொடியில் பனைமரத்தையே காட்சிப்படுத்தினர் என்பதையும் காணலாம்.

1978ல் தமிழகத்தின் மாநில மரமாகப் பனை அறிவிக்கப் பட்டதையும், கம்போடியாவின் தேசியச் சின்னமாக பனைமரம் இருந்து வருவதையும், பொருத்திப் பார்க்கும் ஆசிரியர், இந்தியாவில் இருந்து குறிப்பாக, தமிழர்களுடன் இருந்த வாணிபத் தொடர்பினால் உலகெங்கிலும் பனைமரம் பரவலாக்கம் பெற்ற பின்னணியைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

குறிப்பாக, கம்போடியாவின் அங்கோர்வாட்காட்டின் கோவில்களில் இந்தியத் தெய்வங்கள் வீற்றிருப்பதோடு அக்கோவில்களைச் சுற்றிலும் பனைமரங்களே பிரதானமாய் விளங்குகின்றன.

நூலாசிரியரின் கூற்றின் படி தாவரவியல் ஆய்வாளர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் ஆர்வலர், ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் பயன்பயக்கும்.

– பன்னிருகை வடிவேலன்.

நன்றி: தினமலர், 5/3/2017.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *