பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை, இராம.லெட்சுமணன், சகுந்தலை நிலையம், பக். 1328, விலை 1200ரூ.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று முதல், ஒன்பது வரையிலானவை தோத்திரம். 10வது சாத்திரம். 11வது பிரபந்தம். 12வது புராணம்.

முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்பந்தர் பாடியது, ‘திருக்கடைக்காப்பு’ எனவும், நாவுக்கரசர் பாடிய, நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள் ‘தேவாரம்’ எனவும், சுந்தரர் பாடிய ‘திருப்பாட்டு’ ஏழாம் திருமுறையாகவும், மாணிக்கவாசகர் அருளியது, எட்டாம் திருமுறையாகும்.

ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, ஒன்பதாம் திருமுறையாகும். இதில் தேவாரப் பாடல்களில் இடம் பெறாத எட்டு திருத்தலங்களும் அடங்கும். இதில் இடம் பெற்றுள்ள திருவாலியமுதனாரும், புருடோத்தம நம்பியும் வைணவர்கள்.
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனச் சைவத்தின் மேன்மையை அருளிய திருமூலரின் திருமந்திரம், 10ம் திருமுறையாகும்.

பதினோராம் திருமுறை, 12 பேர் பாடிய, 40 நுால்களைக் கொண்டது. காரைக்கால் அம்மையார், பட்டினத்துப்பிள்ளை, நம்பியாண்டார் நம்பி போன்றோர் இதில் அடங்குவர். சேக்கிழார் இயற்றிய ‘பெரிய புராணம்’ 12வது திருமுறையாகும்.

பன்னிரு திருமுறைகளிலும் உள்ள மொத்தம், 18,375 பாடல்கள் அனைத்தும் இதில் ஒரே புத்தக வடிவில் அழகுற அச்சு வடிவம் பெற்றுள்ளது.

மேலும், 27 பெருமக்களின் திருவுருவப் படங்களும், அவர்களின் வாழ்க்கைக் குறிப்போடு, பாடலின் முதல் அடி குறிப்போடு வந்துள்ளது சிறப்பாகும்.

பல வகையான நோய்களைத் தீர்க்கும் பலவகைப் பதிகங்கள் உள்ளன. மருந்தும் திருமுறை, மந்திரமும் திருமுறை. பன்னிரு திருமுறைகளையும் தினம் ஓத இயலாதவர்கள், தேவாரப் பாடல் ஒன்று, திருவாசகப் பாடல் ஒன்று, திருவிசைப்பாவில் ஒன்று, திருப்பல்லாண்டிலிருந்து ஒன்று, பெரியபுராணத்திலிருந்து ஒன்று என ஐந்து பாடல்களை பாடும், ‘பஞ்சபுராணம்’ மரபும் சைவ நெறியாகும்.

இந்நுாலின், ‘அச்சோபதிகத்தில்’ (பக்.600), 12 பாடல்கள் உள்ளன. ஏனைய பல பிற பதிப்புகளில், ஒன்பது பாடல்களே உள்ளன. சித்தர் மரபில் அந்த, மூன்று பாடல்களும் பிற்சேர்க்கை என்ற கருத்தும் உண்டு.

திருச்சிற்றம்பலமுடையானே வந்து எழுதிய திருவோலை (திருவாசகம்) என்பதனால், ‘ஒன்பது ஆகிய உருவுடைப் பெருமான் ஒற்றியூர்ப் பெருமான்’ என்று வள்ளலார் பாடியதற்கேற்ப ஒன்பது பாடல்களே அவை என, கருத இடமுண்டு.

எதுவாயினும் திருவருளால் எழுதப்பட்டது என்பதனால் ஒருசேர அனைத்தையும் தொகுத்துப் பதிப்பித்த இராம.லெட்சுமணனின் திருப்பணி பாராட்டுக்குரியது.
சைவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் வாங்கி ஓத வேண்டிய ஞானப் பொக்கிஷம் இது.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026619.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

– பின்னலுார்

நன்றி: தினமலர், 18/3/2018.

Leave a Reply

Your email address will not be published.