தமிழக சாவகக் கலைத் தொடர்புகள்


தமிழக சாவகக் கலைத் தொடர்புகள், சாத்தான்குளம் அ.இராகவன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.168, விலை ரூ.150. 

பண்டைக்காலத்தில் இந்தியாவுக்குத் தெற்கே, இந்து மகாசமுத்திரத்தில் பூமியின் நடுக்கோடு வரை பரவிக் கிடந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு சாவக நாடு. அது தமிழகம் அல்லது லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியாகும். கடல்கோள்களால் இந்நிலப் பரப்பின் பெரும்பகுதி அழிந்தது போக, சிதறுண்ட தீவுகளில் ஒன்றாக இன்றைய சாவகத் தீவு (ஜாவா) உள்ளது. இத்தீவு பண்டைய தமிழகத்தின் தொடர்ச்சி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பல சான்றுகள் கிடைத்துள்ளன. அந்தச் சான்றுகளைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியாக இந்நூல் உள்ளது.

சாவகத் தீவில் காணப்படும் பல கோயில்கள் சிவனுக்குரியவை. சிவபெருமானையே சாவகத் தீவு மக்கள் முழுமுதற் கடவுளாக வழிபட்டிருக்கின்றனர். சாவகத்தில் உள்ள சிவன்கோயில் பெரும்பாலும் 5,500 அடி உயரமுள்ள டியெங் பீட பூமியிலேயே உள்ளன. இங்கு சிவனுடைய உருவம் சிறிது வேற்றுமையுடையதாய் இருக்கிறது. சிவன் தாடியுடையவனாகவும், தொப்பி அணிந்தவனாகவும் காணப்படுகிறான். ஆனால் கையில் அக்கமாலையும் கமண்டலமும் உடையவனாகிக் காட்சி அளிக்கிறான்.

சிவ வழிபாட்டைப் போலவே புத்த வழிபாடும் இருந்திருக்கிறது. என்றாலும் இரு பிரிவினருக்கும் மோதல்கள் இல்லை. புத்தரின் கோயில்கள் பலவற்றில் சைவர்களின் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. சாவகத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோர் தமிழர்களோடு இரத்த சம்பந்தமான தொடர்புடைய மக்களாகும். அவர்கள் முன்னோர்கள் எல்லாம் சைவ சமயத்தைத் தழுவியவர்களாவார்கள். அவர்களின் கலைகள் எல்லாம் தமிழ்நாட்டுக் கலைகளின் பிரதிபலிப்பேயாகும். பல்வேறுவிதமான கோவில்களும் நினைவுச் சின்னங்களும் இங்கிருப்பதைப் போலவே இருக்கின்றன. தமிழ்நாட்டை விளக்குகளைப் போன்ற திருவிளக்குகள் அங்கு கிடைத்துள்ளன. இவ்வாறு சாவகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள பல சமய, பண்பாட்டுத் தொடர்புகளைப் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

நன்றி:தினமணி, 13-04-2020.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *