திருக்குறள் குறளின் எளிய குரல்
திருக்குறள் குறளின் எளிய குரல், டாக்டர் நா.வெங்கட், தி ராமன்ஸ் புக்ஸ், பக். 280, விலை 40ரூ.
திருக்குறளுக்கு 19 ஆம் நூற்றாண்டு முடிய பதின்மர் உரைகளே இருந்தன. 20 ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை ஆயிரக்கணக்கான உரைகள் உருவாகி, உலகமெங்கும் சென்றுவிட்டன. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், உலகின் மூத்த மொழியாகிய தமிழில் இதை இயற்றினாலும், இதை ஒரு குறிப்பிட்ட மொழியினருக்கும், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கும், குறிப்பிட்ட நாட்டினருக்குமாக இன்றி, உலகின் அனைத்து மக்களுக்குமான ஒழுக்கம் நிறைந்த வாழ்வியலைக் கற்பிக்கும் உலகப் பொதுமறையாக ஈர்த்துள்ளார்.
இதுவே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழருக்கான பெருமை. இத்தகைய பெருமை மிக்க திருக்குறள் எந்த வடிவில் அமைந்துள்ளதோ, அதே வடிவில் பாமரனும் புரியம் வண்ணம் எளிய தமிழ் நடையில் உரையும் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பாகும். அதாவது, திருக்குறளின் ஒவ்வொரு குறட்பாவும் இரண்டு அடிகளில், ஏழு சீர்களைக் கொண்டு அமையபெற்றவை. அதேபோல் இந்நூலில் உள்ள ஒவ்வொரு உரையும், இரண்டு வரிகளில், ஏழு வார்த்தைகளைக் கொண்ட பொருளாக மிக எளிமையான நடையில் அமைந்துள்ளது. இந்நூலாசிரியரின் திறமையைக் காட்டுகிறது. உதாரணத்திற்கு கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தின் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற முதல் குறட்பாவுக்கு, எழுத்துக்களில் முதலாவது அ அதுபோல் உலகுக்கெல்லாம் முதல்வன் கடவுள் என்பது உரையாகும். இப்படி திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் இரண்டே வரிகளில் மிகச் சிறந்த உரைகளை உலகில் முதல் முறையாக இந்நூலில் வடித்திருப்பது பாராட்டத்தக்கது. இந்நூல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பயன் தரத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 27/11/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818