திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், மூன்று காண்டங்கள்: மதுரைக்காண்டம், பக்.668, கூடற்காண்டம், பக்.560, திருவாலவாய்க் காண்டம், பக்.528, (மூலமும் உரையும்), உரையாசிரியர்: பழ.முத்தப்பன், சகுந்தலை நிலையம், மூன்று காண்டங்களும் சேர்த்து விலைரூ.1200.

திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய மூன்றும் சைவ சமயத்தின் மூன்று கண்களாகத் திகழ்பவை. நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் புலியூர் நம்பியும், பரஞ்சோதி முனிவரும் இயற்றியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பரஞ்சோதியாருடையது கூடுதல் சிறப்புடையது.

மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கும் இந்நூல்கள் மதுரைக்காண்டம் (18 படலங்கள்), கூடற்காண்டம் (30 படலங்கள்), திருவாலவாய்க் காண்டம் (16 படலங்கள்) என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு 64 திருவிளையாடல்களை உள்ளடக்கியுள்ளது.

மதுரையில் சிவபெருமான், தம் மெய்யடியார்கள் பொருட்டு செய்தருளிய 64 திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் கூறப்பட்டுள்ளது. வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன.

ஹாலாஸ்ய மகாத்மியத்தை பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்ததுடன், அதைச் செய்யுள் நடையில் 3362 செய்யுள்களாக இயற்றி அருளினார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 ஆவது செய்யுளிலிருந்துதான் சிவபெருமானின் திருவிளையாடல்கள் (தருமிக்கு அருளியது, பிட்டுக்கு மண் சுமந்தது, பாண்டியனுக்கு அருளியது முதலியன தொடங்குகின்றன.

மதுரை மீனாட்சியம்மை பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றி, சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும்படி கூறியமையால் இந்நூலை பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது.

மதுரையில் சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்களின் செய்யுட்களும் அதற்கான எளிய விளக்கவுரையுடனும் இந்நூல் திகழ்கிறது.

நன்றி: தினமணி, 28/2/2018

Leave a Reply

Your email address will not be published.