இனி நான் டைகர் இல்லை
இனி நான் டைகர் இல்லை, உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி. பக்கங்கள்: 80, விலை: 60 ரூ
சாளரங்களை திறக்கும் கதையாளி வெவ்வேறு வடிவங்களில் குறுகிய பக்கங்களில் நகர்கின்றன சமயவேலின் கதைகள். — சா. தேவதாஸ் காற்றின் பாடல் என்னும் கவிதைத் தொகுதியின் மூலம் பரவலாக அறியப்பட்டுள்ள கவிஞர் சமயவேலின் சிறுகதைத் தொகுதி, இனி நான் டைகர் இல்லை. 16 சிறுகதைகளைக் கொண்டுள்ள இந்த நூல், சிறுகதைகளின் பல்வேறு வடிவங்களை வாசகர்களுக்கு பரிச்சயமாக்குகிறது. கட்டுரை வடிவில் ஒரு கதை என்றால் அறிவியல் புனைவாக இன்னொரு கதை. அழகிய கனவாக ஒரு கதை என்றால், மிகையதார்த்தப் போக்கில் வேறொரு கதை, மாய நிகழ்வாக ஒரு கதை என்றால், நாவல் தன்மையில் மற்றொரு கதை. இவ்வளவுக்கும் கதைகளெல்லாம் மன்றல்லது நான்கு பக்கங்களில். ‘திரும்புதல்’ என்னும் கதை ஒரு வசீகரக் கனவாக அமைந்திருக்கிறது. இந்தக் கதையின் பிரதானப் பாத்திரம் மீனாகிப் பின் இயல்பு நிலைக்கு வருவதம் தேவதைக்கு நிகராக வடிவாம்பிகை என்னும் மங்கையைக் கண்டு அதிசயிப்பதும் இறுதியில் தன்னுடைய மனதைக் கழற்றி எறிந்துவிட்டு பரவசம் கொள்வதுமாக இருக்கிறது. “கடல் கடலாவதற்கு முன்பு பூமியின் கணக்கற்ற ஸ்தனங்களிலிருந்து வழிந்த ஆதி ஆறுகள் இரண்டின் நடுவில் சிறு நிலத் துண்டு ஒன்றில் விழுந்து கிடந்தேன்…” என்று அபூர்வமான வாசகம் ஒன்றுடன் தொடங்குகிறது இந்தக் கதை. பிறந்த குழந்தைநீலம் பாரித்து இருப்பதும், இருதயக் கோளாறைச் சரி செய்ய முடியாது போக இறந்து போவதும் தாங்கொணாத் துயரில் துடிக்கும் தாய், தான் கருவுற்ற தருணத்தில் ‘இந்தக் குழந்தை இப்போது வேண்டாமே’ என்று எண்ணியதுதான் இந்த அவலத்திற்குக் காரணம் என்கிறாள். “உடல் மொழியிலிருந்து அதன் உயிரிசையை நீக்கிவிட்டது தான் நம் காலத் துயரம்” என்னும் வரி, கவிதையின் உக்கிரத்துடன் அதிர்வுகொள்கிறது. “இனி நான் டைகர் இல்லை” என்னும் தலைப்புக் கதையில் இடம் பெறும் ‘டைகர்’ என்ற நாய், மனிதகாட்டு நாயாக சுதந்திரத்துடன் உலவித் திரிய வேண்டும் என்று வேட்கை கொள்ளும்போது வெறி நாய் என்று முத்திரை குத்தப்பட்டு சாகடிக்கப்படுகிறது. இந்தக் கதையின் இறுதி வாசகம் முரண் சுவையுடன் உள்ளது. “விடுதலையைப் பற்றி உங்களில் நிறையப் பேருக்கு எதுவும் தெரியாது என்பதற்காகவே இந்தக் கதையைக் கூறினேன்.” சதா விடுதலையைப் பற்றி முழங்கிக் கொண்டிருக்கும் மனிதனிடமிருந்து ஒரு விலங்குகூட விடுதலை பெற முடியவில்லை. ஆனால் “விடுதலையை மிகுந்த வீர்யத்துடன் வழங்க இயற்கை எப்பொழுதும் தயாராக இருக்கிறது” என்னும் வாசகம் இடம் பெறுகிறது. “மற்றும் ஏழு நாய்கள்” கதையில். நிம்மதியின்றி நெருக்கடியில் தவித்து, மன அழுத்தங்களுக்கு உள்ளாக நேரும் நகர வாழ்க்கையிலிருந்து வெளியேறவேண்டிய அவசியத்தை சில கதைகளில் பதிவு செய்துள்ளார். அதே வேளையில் சிறு சிறு காரணங்களுக்காக பெரும் விரோதம் பாராட்டி, எதிரியைப் பழிவாங்குவதற்காக அவனது வைக்கோல் போருக்கு தீ வைப்பதும் தீ எதிரியை மட்டும் துயருக்குள்ளாக்காமல், ஊரையே அழிப்பதுமான கிராமத்துச் சித்திரமும் அவரால் எடுத்துக் காட்டப்படுகிறது. “உள்ளங்கையில் ஜெல்லி மீனை வைத்தபோது ஏற்பட்ட குளிர்மையும் வழுவழுப்பும் இன்னும் உயிர்கள் அழிந்தழிந்து உருவாகும் வாதையும் சந்தோஷமும் மீண்டும் எனக்குள் இறங்கத் தொடங்கியது.” என்றுணர்கிறது ஒரு பாத்திரம். ஒரு பெண்ணின் சந்திப்பு வழங்கும் ஒரு மாய உணர்வு இப்படிச் சொல்லவைக்கிறது. ஒரு படைப்பாளியின் தன்மை என்ன என்பதைப் பற்றி முன்னுரையில் இப்படிக் கூறுகிறார் சமயவேல். “ஒவ்வொரு நொடியும் தன்னை ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் அந்தரங்க சுத்தி உள்ள கதைக்காரனே பெரும் படைப்பாளியாகவும் மாற முடியும். சமூக அக்கறை, அரசியல் பொறுப்பு, கலாச்சாரப் பொறுப்பு, மொழி அக்கறை, வடிவ நேர்த்தி என்னும் எல்லா அலகுகளையும் உள்ளடக்கிவிடும் ஆற்றலை கலைஞன் இப்படித்தான் பெறுகிறான்.” சமயவேல் படைப்புகள் வாசகர்களுக்கு புதிய சாளரங்களைத் திறந்துகாட்டும். நன்றி: இந்தியாடுடே, செப்டம்பர், 05/12