கம்பனைத் தேடி
கம்பனைத் தேடி, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 175ரூ.
பிர்மஸ்ரீ வாசுதேவ் கோவிந்தாச்சார்யா, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா உள்பட 9 பேரின் படைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கம்பனில் சட்டம் என்ற கட்டுரை, ராம காவியத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் நிகழ்த்திய சூழ்ச்சிகள் எந்தெந்த குற்றப் பிரிவுகளில் வருகின்றன? தசரதன் கைகேயிக்குக் கொடுத்த வாய்மொழி ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகுமா? கம்பனின் படைப்பில், தசரதனின் காலத்திலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்த விதம் போன்றவற்றை விளக்கி நம்மை வியக்க வைக்கிறது. கம்பனில் சடையப்பர் கட்டுரை, சடையப்ப வள்ளலின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது பெருமைகளைப் பற்றிக்கூறுகிறது. ம.பெ.சீனிவாசனின் கம்பனின் பாட்டில் பழமொழிகள் என்ற கட்டுரை, கம்பன் என்னென்ன பழமொழிகளை எந்தெந்த இடங்களில் எப்படியெல்லாம் பயன்படுத்தியுள்ளான் என்பதை மிகவும் நேர்த்தியாகக் குறிப்பிட்டுள்ளது. கம்ப ராமாயணத்தைப் பல கோணங்களில் பார்த்து ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் சிறந்த தொகுப்பு இந்நூல். நன்றி: தினமணி, 30/6/2014.
—-
புலனாய்வு இதழ்கள், கவுரி பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, வி9லை 130ரூ.
அரசியல் மற்றும் சமூகத் தளத்தின் உண்மை நிலவரங்களை மக்கள் முன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்துபவை புலனாய்வு இதழ்களாகும். 1970முதல் 2012 வரையான ஆண்டுகளில் வெளியான, தற்போது வெளி வந்து கொண்டிருக்கின்ற 258 புலனாய்வு இதழ்களைப் பற்றி அரிமா க. பட்டாபிராமன், தி.மா. சரவணன் ஆகியோர் கால வரிசையில் அறிமுகம் செய்துள்ளனர். அரிய முயற்சி. பல புலனாய்வு இதழ்களுக்கான அட்டைப்படங்களை வெளியிட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 25/6/2014.