கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்
கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
கல்வியை கடல் என்பார்கள். ஆனால் நூலாசிரியர் கல்வியை பூங்கா என்று புதிய சிந்தனையுடன் அணுகியுள்ளார். கல்வி களஞ்சியமாக திகழும் இந்த நூலில், சுமையான கருத்துக்களுக்கும், நீதிக்கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நூலில் உள்ள கல்விச்சிந்தனை, குரு வணக்கம், இளைஞர்கள், பெண்கள், கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகள் வாசிப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாட்டை வல்லரசாக்கும் வலிமையும், புத்திக் கூர்மையும் இளைஞர்களுக்கு அவசியம் வேண்டும் என்று நூலாசிரியர் முனைவர் மு.ராசாராம் ஐ.ஏ.எஸ். வலியுறுத்துகிறார். திசைமாறி போகும் இளைஞர்களுக்கு இந்நூல் ஒரு கடிவாளமாக இருக்கிறது. கல்வியாளர்களும், மாணவர்களும் இந்நூல் கூறும் அறிவுரைகளை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றியை எளிதாக பெற முடியும். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.
—-
லெமுரியா குமரிக்கண்டம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை130ரூ.
லெமுரியா ஆராய்ச்சியாளர்கள் பலரை ஈர்த்த பெயர். தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியாக, உலக மக்கள் பலரும் கூறும் நிலப்பரப்பு. பூமிபந்தின் பல்வேறு இடங்களிலும் லெமுரியா இருந்ததாக அவரவர்கள் அடையாளம் காட்டினார்கள். ஆயினும், உண்மையில் லெமுரியா எங்கிருந்தது? பண்டைய தமிழர்களின் குமரிக் கண்டத்திற்கும், லெமுரியாவிற்கும் என்ன தொடர்பு? இரண்டும் ஒன்றா? தென் திசையே முன்னோர்களின் திசை என்றும், முன்னோர் வழிப்பாட்டைத் தென் திசை நோக்கியே செய்ய வேண்டும் என்பதும் இந்தியர்களின் நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கைக்கு, குமரி முனைக்குத் தெற்காக இருந்த குமரிக் கண்டமே காரணமா? ஆதி மனிதர்கள் தோன்றி வாழ்ந்து செழித்த பகுதியாகவும் மானுடத்தின் தொட்டிலாகவும் லெமுரியா என்னும் குமரிக் கண்டம் விளங்கியதா? உலக நாகரிகங்களின் ஆதிப்பிறப்பிடமாகவும் லெமுரியா திகழ்ந்ததா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தேடும் பயணத்தில் வியக்க வைக்கும் உண்மைகளை உரைக்கிறார்கள் நூலாசிரியர்கள் சுதா சேஷய்யன், ஸ்ரீகாந்த். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.