காப்கா எழுதாத கடிதம்

காப்கா எழுதாத கடிதம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், பக். 208, விலை 200ரூ.

இன்று வாழ்வதே முதன்மையானது தமிழ் எழுத்துலகின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில், ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன், இலக்கிய இதழ்களிலும், இணையதளத்திலும் எழுதிய கட்டுரைகளில், 28 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, நூல் வடிவில் வெளிவந்துள்ளது. அனைத்து கட்டுரைகளும் புத்தகங்கள் தொடர்பானவை. வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழன் காத்தூ, ஹெர்மென் மெல்வில், தோரரோ, மிரோஜெக், ரேமண்ட் கார்வர் உள்ளிட்டோரின் புத்தகங்கள் பற்றியும், அது தொடர்பான ஆசிரியரின் பார்வையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. காப்கா, தன் தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம், அவரின் தந்தையால் படிக்கப்படவில்லை என்றாலும், இலக்கிய உலகில் அந்த கடிதம் முக்கிய இடம் பெற்றுள்ளது என, சுட்டி காட்டும் நூலாசிரியர், கடந்த காலம்,நினைவுகளால் உருவாக்கப்படுகிறது. எதிர்காலம் கனவுகளால் உருவாக்கப்படுகிறது. ஆகவே இன்றில் வாழ்வதே முதன்மையானது, அதைத்தான் ஜென்னும் சொல்கிறது (பக். 85) என்கிறார். ‘காடு கற்றுத் தருகிறது’ என்ற கட்டுரையில், கானகவாசிகளின் குரலை, நூலாசிரியர் எதிரொலிக்கிறார். நாங்கள் பசிக்காக, காட்டில் உள்ள எதையும் வேட்டையாடுகிறவர்கள், ஆனால் பணத்துக்காக, வசதிக்காக, காட்டில் உள்ள ஒரு சுள்ளியைக் கூட ஒடித்து விற்கமாட்டோம் (பக். 86). ஒவ்வொரு மரமும் அது கொடுக்கும் பழத்தினால் அறியப்படும் என, லூக்கா தன் சுவிசேசத்தில் ஒரு வரி எழுதியிருக்கிறார். அது மரத்திற்கு மட்டுமானதல்ல, எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடியது தானே (பக். 158). ஒனா நோ கோமாச்சி என்ற ஜப்பான் பெண் கவிஞரின் பெயரை, அரிசிக்கு வைத்திருககினறனர். நடன மங்கை ஒருத்தி எப்படி மகாராயாகிறாள் என்பதை விளக்கும் நாவல். பழைய புத்தக கடைக்காரருடனான, ஆசிரியரின் நெகிழ வைக்கும் சம்பவம் என, ஒவ்வொரு கட்டுரையும் சுவாரசியத்தையும், வாழ்வின் அர்த்தங்களையும் தருகிறது. காம்பஸ் போல, புத்தகங்களின் இலக்கிய ஆளுமைகளை மையமாக கொண்டாலும், இந்திய பிரிவினையில் துயரங்கள் கடலோடிகளின், திமிங்கல வேட்டை, அருங்காட்சியகங்களின் முக்கியத்துவம், மகாபாரதத்தை எப்படி படிக்க வேண்டும் என, பல்வேறு தளங்களில் ஆசிரியர் வலம் வந்திருக்கிறார். மருத்துவர் வில்லியம் கால்லோசின் சிறுகதைகள், இரண்டு பக்க அளவே இருக்கும். அதிலேயே நம் மனசாட்சியை உலுக்கிவிடுவார் என சிலாகிக்கும் ‘முறிந்த கரண்டி’ கட்டுரையோடு இந்த நூல் முடிவு பெறுகிறது. தமிழின் சிறந்த புத்தகங்கள் வரிசையில், இந்த நூலுக்கு இடம் உண்டு. -சி. கலாதம்பி. நன்றி: தினமலர், 25/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *