நீட்சி
நீட்சி, பாரவி, இயல் பதிப்பகம், பக். 208, விலை 95ரூ.
பாரவி எழுதும் பல கதைகள், பரிசோதனை முயற்சிகள். முதல் கதையான வரப்பு திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பரிசு பெற்ற கதை. இது, வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை அறிமுகம் செய்கிறது. எருமை மாட்டைக் கட்டி இருக்கும் மூக்கணாங்கயிறு இறுகி, ரத்த காயம் உண்டாவதைச் சொல்லி உருகுற கதை நிறம். கண் மருத்துவப் பரிசோதனைக்கு வரும் கிராமத்து மனிதர்களின் அவலங்களைச் சொல்லும் இருட்டு, இறுதிச் சடங்கின்போது வாய்க்கரிசி போடுவதைச் சொல்லும் வாய்அரிசி முதலியன மிக யதார்த்தமானவை, ஒரு கற்பிதித்தில் இருந்து நெடும்பயணம் போன்ற கதைகள், பரிசோதனை முயற்சிகள். படைப்பு, வாசிப்பில்தான் முழுமை காண முடியும். வாசகத் தேர்ச்சி குறைவு காரணமாக, இதைப்போன்ற பரிசோதனை முயற்சிக் கதைகள் புறக்கணிக்கபடலாம். ஆனால் ஆழ்ந்து படித்தால் பொருள் விளங்கும். -எஸ். குரு. நன்றி: தினமலர், 25/1/2015.
—-
கில்கமேஷ் காவியம், டாக்டர் தியாகராஜா, இராமநாதன் பதிப்பகம், சென்னை, விலை 40ரூ.
உலகின் முதல் காவியம் எது? ஆராய்ச்சியாளர்கள் அது கில்கமேஷ் காவியமே என்று நம்புகிறவர்கள். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சுமேரிய மொழியில் களிமண் வில்லைகளில் எழுதப்பட்டதாகவும், சுமேரிய அரசுக்குப் பின் அக்காடியர்களால் அக்காடிய மொழியில் மீண்டும் களிமண் வில்லைகளில் எழுதி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முழு காவியம் கிடைக்காவிட்டாலும் கிடைத்ததிலிருந்து ஒருவாறு எழுதப்பட்டிருக்கிறது. இது சாகசங்கள் நிறைந்த கதை. மகாபாரதம்போல இதற்கு தத்துவப் பின்னணியோ, வரலாற்று முக்கியத்துவமோ கிடையாது. ஆனால் இதில் கூறப்படும் இடங்கள் இன்றும் உள்ளன. கிடைத்த தகவல்களைத் திரட்டி லண்டன் எஸ். தியாகராஜா தமிழில் ரசமிக்க நூலாகத் தந்திருக்கிறார். பல சுமேரியப் படங்களும் வண்ண அட்டைப் படமும் கொண்ட இந்த நூலின் விலை நாற்பது ரூபாய் மட்டுமே. நன்றி: குங்குமம், 22/12/2014.