நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு
நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-1.html மன்த்லி ரெவ்யூ கட்டுரைகள் (1949 – 1998) அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் முதல், போராளி சேகுவேரா வரை எழுதிய பத்திரிகை என்ற பெருமை மன்த்லி ரெவ்யூ இதழுக்கு உண்டு. இதன் ஆசிரியர்களாக இருந்த பால் ஸ்வீசியும் லியோ ஹீயுபர்மேனும் கம்யூனிஸ்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். (இதே விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டவர்தான் சார்லி சாப்ளின்) இவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து 1949ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்திய இந்த இதழில் கம்யூனிஸம், சோஷலிசம், ஏகாதிபத்தியம், பொருளாதாரம் குறித்து உலகளாவிய இடதுசாரி சிந்தனைகளை விதைத்தார்கள். அந்த இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து அமெரிக்கா, தனது ஏகாதிபத்திய முகத்தைக் காட்டத் தொடங்கிய காலத்தில் எதிர்ப்புக் குரலாக வெளிவரத் தொடங்கிய இந்தப் பத்திரிகையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சோஷலிசம் ஏன்? என்ற கட்டுரையை எழுதினார். பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்னைகளில் வல்லுநராக இல்லாத ஒருவர் சோஷலிசம் பற்றிக் கருத்துக் கூறுவது ஏற்புடையதுதானா? பல காரணங்களினால் அது சரியானதுதான் என்ற நியாயத்தை ஐன்ஸ்டீன் எழுதினார்.குறுகிய இடர்நிறைந்த இந்த வாழ்வின் அர்த்தத்தை ஒருவன் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்வதன் மூலமே பெற முடியும் என்று அவர் எழுதினார். இது இன்றைய அறிவுஜீவிகள் கவனிக்க வேண்டியது. மனித இனத்தின் ஒட்டுமொத்த வரலாற்றில் பெற்றுள்ள மிக முக்கியமான சொத்துகளாகிய மனித நேயம், பகுத்தறிவு, முன்னேற்றம் ஆகியவை அழிந்துபடாது காக்கும் பொறுப்பும் கடமையும் அறிவுஜீவிகளின் தோளில்தான் விழுகிறது என்று பால் ஏ.பரான் எழுதியது இன்றைய அறிவுஜீவிகளின் முகத்தில் அறைந்து சொல்கிறது. லியோ ஹுபெர்மனின் தனது கட்டுரையில், எதிரி முதலாளித்துவ அமைப்பே அன்றி, முதலாளிகள் அல்ல. தனிநபர்களைக் கொடியவர்களாகச் சித்திரித்து, அவர் இல்லாவிட்டால் எல்லாம் நன்றாக இருக்கும் என்று சித்திரித்தல் தவறு. இந்த அமைப்பு அவ்வாறு அவர்களை நடந்துகொள்ளச் சொல்லி விரட்டுவதால் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள். தீமை செய்பவர்களை வெறுக்குமாறு மக்களைத் தூண்டுவதில் நமக்கு ஆர்வமில்லை. இந்த அமைப்பு மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை மக்களை உணரச்செய்வதில்தான் நமக்கு ஆர்வம் என்று சொன்ன கருத்தை இடதுசாரி இயக்கங்கள்கூட உண்மையில் உணவில்லை. சில புரட்சிகர அமைப்புகளைப்போல் இல்லாமல் ஏகாதிபத்தியம் தனது தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறது என்ற தனது விமர்சனத்தை சே குவேரா இந்தப் பத்திரிகையில்தான் வைத்தார். காலங்களைக் கடந்தும் கனமான விஷயங்களைப் பேசும் கட்டுரைகள் இவை. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 19/11/2014.