திரௌபதி

திரௌபதி, யார்லகட்ட லக்ஷ்மிபிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி, பக். 368, விலை 200ரூ.

பாரதத்தின் மாபெரும் இதிகாசமான மகாபாரதம் வெறும் கதையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்வையும், அப்போது நிலவிய அதிகாரப் போட்டியையும் வெளிப்படுத்தும் ஆவணம். மகாபாரதம், காலந்தோறும் புதிய வடிவில் மீள்பார்வைக்கும் மறுவாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வெளியாகியுள்ள புதினமே இந்நூல். நூலாசிரியர் யார்லகட்ட லக்ஷ்மிப்ரசாத் மகாபாரக் கதையின் மைய நாயகியான திரௌபதியை ஆதார விசையாகக் கொண்டு இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார். திரௌபதியின் பார்வையில் மகாபாராத நிகழ்வுகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், காப்பிய மாந்தர்களின் மனோநிலைகளையும் வாசகர்களுக்கு தனது கற்பனைவளம் கொண்டு புலப்படுத்த முயல்கிறார். எழுத்தாளருக்கே உரிய சுதந்திரத்துடன் அக்கால நிகழ்வுகளைப் புதினமாக்கியிருக்கும் ஆசிரியர். பல இடங்களில் வரம்பு மீறுகிறார். ஐவரின் மனைவியாக வாழ்க்கைப்பட்ட பெண்ணின் உடலியல் உளவியல் சிக்கல்கள், அரசு அதிகாரத்தில் பகடையாக்கப்படும் பெண்களின் வாழ்க்கை, தனிப்பட்ட விதத்தில் சாதாரண வாழ்க்கை வாழத் துடிக்கும் அரசகுல மகளிரின் துயரம் எனப் பலவற்றைப் புதினம் வெளிப்படுத்துகிறார். துருபதனின் பழிவாங்கும் அரசியலின் உபவிளைவே திரௌபதியின் பிறப்பு. பாண்டவர் ஐவரை மணந்ததும்கூட ஒரு குடும்ப அரசியல் நிர்பந்தமே. நடுச்சபையில் கௌரவர்களால் துகிலுரியப்பட்டபோது அதிகார ஆணவத்திற்குப் பலியானவள் அவள். யாக குண்டத்தில் உதித்தது முதல் இறுதி யாத்திரை வரை அவளுக்கு நிற்க நேரமில்லை. மகாபாரதக் கதையை வழிநடத்தும் பெருநெருப்பு அவளே. அத்தகைய திரௌபதி குறித்து எழுதும் பல இடங்களில் விரச எல்லைகளை மீறுகிறார் ஆசிரயர். அனைத்துத் தரப்பினரும் படிக்க வேண்டிய புதினத்தை வயது வந்தோருக்கு மட்முக மாற்றியதை லக்ஷ்மி பிரசாத் தவிர்த்திருக்க வேண்டும். நன்றி: தினமணி, 15/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *