பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும்

பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும், ப. குணசேகர், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 120ரூ.

தென் அமெரிக்காவின், சிலி நாட்டுக் கவிஞன் பாப்லோ நெருதாவையும், தமிழன்பனையும் கவிதைகளால் உரசிப் பார்த்திருககிறார் நூலாசிரியர். மக்கள் கவிஞராக இருவரையும் பார்த்ததோடு மட்டும் அல்லாமல், இரு கவிஞர்களின் மேடைப் பிரம்மாண்டங்களையும் விரித்துப் படைத்துள்ளார். எட்டு தலைப்புகளில் இரு மொழிக் விஞர்களின் கவிதைகளைச் சாளரத்தின் வாயிலாகக் காட்டுகிறார். சில இடங்களில் கதவைத் திறந்தும் வெளிப்படுத்துகிறார். திறனாய்வு, விமர்சனம் எனும் எல்லைகளைக் கடந்து, இரண்டு பேரின் படைப்புகளையும் எடுத்து வைத்து, மொத்த திறனாய்வையும் வாசகர் பார்வைக்கு விட்டிருக்கிறார். ஒப்பாய்வுக் களம் இன்னும் ஓய்ந்து போகவில்லை என்பதற்கு, இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு. பாப்லோ நெருதா ஓர் உலகக் கவிஞர். தன்னுடைய கவிதைகளாலேயே உலகைத் தன் ஆளுமைக்குள் கொணர்ந்தவர். மக்களோடு தன் கவிதைகளை இரண்டறக் கலக்க வைத்தவர். சிலி நாட்டுக்கே சிறப்பைக் கொணர்ந்தவர். கவிதையைக் கண்ணும் கருத்துமாய்க் கொண்டவர். கவிதை வரிகளால் உயிரின் வரிப்பூச்சுகளைப் பதித்தவர்(பக். 17). -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 27/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *