பிணங்களின் முகங்கள்
பிணங்களின் முகங்கள், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 248, விலை 200ரூ.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அத்துடன் ஏழை பிள்ளைகளுக்கும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டு வசதியையும் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இன்று கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், நாம் நம் சமூகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் ஒழிந்த பாடில்லை. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் தொடங்கி, மளிகடைகள், துணிக்கடைகள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பனியன் கம்பெனிகள் என எங்கெங்கும் குழந்தைத் தொழிலாளர்கள் வியாபித்துள்ளனர். குடும்பச் சூழல், பொருளாதாரக் காரணங்கள் போன்றவை, பள்ளிக்கூடங்களை நோக்கி நடக்க வேண்டிய பிஞ்சுகளின் பாதங்களை, தொழில் நிறுவனங்களின் வாசற்படியை மிதிக்க வைக்கின்றன. சக வயது நண்பர்களுடன் கேலியும், கிண்டலுமாக ஓடி, ஆடி விளையாட வேண்டிய பாலகர்களை, முதலாளிகளின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக்கி விடுகின்றன. குழந்தைத் தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநிலை, பணிச்சுமை காரணமாக அவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான நெருக்கடிகள், அவர்களைக் கொத்தடிமைகளாக்கி, உழைப்பை உறிஞ்சும் முதலாளிகள், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ளாத அரசு அதிகாரிகள் என, குழந்தைத் தொழிலாளர்களின் பல்வேறு அவலங்களை மிக யதார்த்தமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல். சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 11/5/2015.