மதில்கள்

மதில்கள், வைக்கம் முகம்மது பஷீர், தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 72, விலை 50ரூ.

மலையாள இலக்கியத்தின் பிதாமகன் வைக்கம் முகம்மது பஷீரின் மதிலுகள் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு மதில்கள். அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் உருவான மதிலுகள் சினிமாவின் மூலம், இந்தக் கதைதான். சுகுமாரனின் தரமான தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கிறது. அரசுக்கு எதிராக எழுதி வந்ததால், ராஜதுரோக வழக்கு ஒன்றில் இரண்டு வருடக் கடும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டு அரசியல் கைதியாக சிறை செல்கிறார் ஓர் எழுத்தாளர். அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்கு வெளியே பெரிய மதில் சுவர். அவருக்குச் சிறை பெரும் துன்பமாக இருக்கிறது. அரசியல் கைதிகளுக்கு விடுதலை உத்தரவு வரும்போதுகூட, இவர் மட்டும் விடுவிக்கப்படவில்லை. பெரும் துயரோடு மதில் சுவரை வெறித்தபடி மரங்களோடு பேசிக் கொண்டிருக்கும் அவருக்கு, மதில் சுவருக்கு அப்பாலிருக்கும் பெண்கள் பிரிவிலிருந்து ஒரு பெண் குரல் வயப்படுகிறது. நாராணணீ என்று அறிமுகமாகும் அந்தப் பெண்ணின் குரலில் கரையும் எழுத்தாளர், அவர் மீது காதல் கொள்கிறார். நாராயணீயும் இவர் மேல் காதல் கொள்கிறார். தொடரும் உரையாடல்கள் இருவரிடையிலான சிநேகத்தை அடுத்தடுத்த படிநிலைகளுக்கு வளர்த்துச் செல்கிறது. இஷ்டம் முதல் இச்சை வரை சகலத்தையும் உரையாடல் மூலமே தங்களுக்குள் பரிமாறிக்கொள்கிறார்கள். ஒரு வியாழக்கிழமையில் பகல் 11 மணிக்கு சிறை மருத்துவமனையில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்துக் காத்திருக்கிறார்கள் இருவரும். அந்த நாளுக்காகக் காத்திருக்கும்போது எழுத்தாளரை ஓர் அதிர்ச்சி தாக்குகிறது. பெரும் மதில் சுவரின் இருபக்கமும் கசியும் காதலை, உரையாடலை, சிறை வாழ்வை எள்ளல் நடையில் மனிதல் புகுத்துகிறது பஷீரின் படைப்புலகம். இருண்ட உலகமாக நம்மை மிரளவைத்திருக்கும் சிறைச்சாலை மீதே காதல் வருமளவு கதைக்குள் நம்மை பிரவேசிக்கச் செய்கிறது பஷீரின் கதை சொல்லும் பாணி. ஆரம்பித்த சுவடே தெரியாமல் கடகடவென உருண்டோடு சடுதியில் முடிந்து மனதில் ஒரு பாரத்தை இறக்கிச் செல்கிறது கதை. வைக்கம் முகம்மது பஷீர் மறைந்து 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரது படைப்புகள் யாவும் இன்னும் நவீன இலக்கியத்தின் பொக்கிஷயங்களாக உள்ளன. அதில் மதிலுகள் இலக்கியத்துக்கு பஷீர் அளித்த கொடை ஒரு பெண்ணின் மீதான தனிமையில் தவிக்கும் ஆணின் அன்பின் பூரிப்பையும், வேட்கையையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது சம்பவக் கோவைகள். சிறையின் மதில் சுவரைப்போல எட்ட முடியாத உயரத்தில் தன் எழுத்து சாகசத்தை நிகழ்த்துவதே பஷீர் என்கிற பேப்பூர் சுல்தானின் சிறப்பு. இந்தக் கதையைத் தழுவி அடூர் கோபாலகிருஷ்ணன் மதிலுகள் என்ற படத்தை இயக்கி, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றார். திரைப்படமாக எடுத்த அந்த அனுபவத்தை அடூர் கோபாலகிருஷ்ணன் பகிர்ந்து கொள்வதும் பிற்சேர்க்கையாக நூலில் இணைக்கப்பட்டுள்ளது. நாவலில் இடம்பெறும் பெண்ணின் மணம் உண்டாக்கும் உணர்வை படத்தில் எப்படிக் காட்சிப்டுத்துவீர்கள்? என்ற கேள்விக்கு, இப்படிப் பதில் சொல்கிறார் அடூர் கோபாலகிருஷ்ணன் அது சினிமாவில் சாத்தியம் இல்லை அதற்கு நான் முயற்சிக்க மாட்டேன். ஒரு வாசகனின் மனதில் ரசவாதம் நிகழ்த்தும் பஷீர் எனும் கதைசொல்லி உயர்ந்து நிற்கும் இடம் அது. நன்றி: ஆனந்தவிகடன், 29/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *