மயிலிறகு மனசு

மயிலிறகு மனசு – தமிழச்சி தங்கபாண்டியன்; பக். 79; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை-02

நெருக்கமான நண்பர்களிடத்தில் நாம் கொண்டிருக்கும் நட்பின் பிரதிபலிப்புகளை உளவியல் நோக்கோடு ஆராயும் நூல். பள்ளித்தோழி, வீட்டு வேலை செய்பவர், திரைப்பட நடிகை, மருத்துவர், சிந்தனையாளர், கவிஞர் போன்றோருடனான நட்பின் பிணைப்புகளை ஆசிரியர் தருகிறார். இனிமையான நினைவுகள் என்பவை எப்போதுமே மனதில் நிலைத்து நிற்பவை. நெருக்கமான சிலரைப் பற்றி நினைவுகள் மனதில் தோன்றினாலே அவை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த அடிப்படையில், கைவினைக் கலைஞர் ராதிகா, திரைப்பட நடிகை ரோகிணி, கவிஞர் இளம்பிறை, வீட்டு வேலை செய்யும் பாண்டியம்மா, மருத்துவர் ஜெயராணி, பள்ளித்தோழி லலிதா, பெரியார் சிந்தனையாளர் அருள்மொழி, பேராசிரியை சரசுவதி, ஆராய்ச்சி படிப்பின் வழிகாட்டி முனைவர் அ.நிர்மலா, பூக்காரி கோவிந்தம்மா, மெய்க்காப்பாளி மலர்மாலா என அனைவரின் தோழமை நறுமணத்தை வீசுகிறது மயிலிறகு மனசு நூல். மிக மெல்லிய தூறலைப்போல் நம்மை மிதக்க வைக்கிறது ஆசிரியரின் எழுத்துகள். கட்டுரைக்கான கட்டமைப்பிலும், கவிதை நடையிலும், தோழிகளின் எளிமை, நேர்மை, யதார்த்தம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது. சுட்டு வைத்த பனங்கிழங்கு வாசமும், குழிப்பணியாரத்தின் மென்மையும், காத்தாடி பார்க்கின்ற பரவசமும், சமயங்களில் சுடுமணல் பொறுக்காத தவிப்பும்…என்று தாயாய் வருடிக் கொடுக்கவும், குழந்தையைப் போல் அடம்பிடிக்கவும் கற்று வைத்திருக்கிறது தமிழச்சியின் தமிழ். அழகான வடிவமைப்பு, அரிய புகைப்படங்கள், மனித நேயமிக்க தகவல்களுடன் கூடிய இந்த நூல் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். நன்றி: தினமணி, 20.08.2012

Leave a Reply

Your email address will not be published.