கால வரிசையில் பாரதி பாடல்கள்
கால வரிசையில் பாரதி பாடல்கள், பதிப்பாசிரியர் – சீனி. விசுவநாதன், விலை 650ரூ., வெளியீடு – சீனி. விசுவநாதன், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை 35.
மகாகவி பாரதி மீது தீராத பக்தி பூண்டு, பாரதியின் படைப்புகள் அனைத்தையும் தேடிப் பிடித்து ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இந்நூலின் படைப்பாசிரியர். இவரது கடின உழைப்பை பாரதியின் உடன்பிறந்த தம்பி சி.விசுவநாதனும், கவிஞர் கண்ணாதசனுமே வியந்து பாராட்டியுள்ளனர். அதன்படி பாரதியின் படைப்புகள் அனைத்தையும் காலவரிசையில் தனித் தனியாகத் தொகுத்து, அவற்றை தரமான புத்தகங்களாகப் பதிப்பித்து, பாரதியின் பிரம்மாண்டத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் இந்நூலின் பதிப்பாசிரியர். அந்த வகையில் இந்நூலில், பாரதி தனது 15ஆம் வயதில் (24-01-1987) எட்டயபுர மன்னருக்கு, தனது பள்ளிப் படிப்புக்கு பொருள் உதவி கோரி கவிதையில் விண்ணப்பம் செய்த பாடல் தொடங்கி, புகழ் பெற்ற பாடல்களான பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, தேசபக்தி பாடல்கள், கடவுள் பக்தி பாடல்கள் உள்பட, 1940ல் தந்தையும், மகனும், கடவுளும் என்ற முற்றுப்பெறாத ஒரு கவிதை நாடகம் வரை, பாரதியின் அனைத்து பாடல்களையும் கால வரிசையில் தொகுத்துள்ளார். தவிர, அப்பாடல்கள் ஒவ்வொன்றும் எந்தச் சூழலில், எதற்காக எழுதப்பட்டது என்ற குறிப்புகளையும் பதிவு செய்துள்ளார். இது தவிர, பின்னிணைப்புகாளக பாரதியால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பிறமொழிப் பாடல்களும், இன்னபிற தகவல் குறிப்புகளும் இந்நூலில் குறிப்பிடப்பட்டு, உறுதியான பைண்டிங்குடன், சுமார் 1,340 பக்கங்களைத் தாண்டிய ஒரு பெரும் புத்தகமாக இது வெளியாகியுள்ளது சிறப்பானது — பரக்கத் (நன்றி: துக்ளக், 29-08-12)